பாலிவுட்டின் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா, டி.வி. நடிகர் மொகித் ரெய்னானை திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழன் படத்தின் மூலம் விஜய் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. அதன்பிறகு பாலிவுட்டுக்கு சென்றவர் வரிசையாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ப்ரியங்கா சோப்ராவும் ஒருவர்.
தற்போது இவருக்கு 30 வயதாகிறது.
கடந்தாண்டு கரீனா கபூர், வித்யாபாலன் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் நடிகைகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் ப்ரியங்காவையும் திருமணம் செய்து கொள்ள அவரது உறவினர்கள் கடந்த சில மாதங்களாக வற்புறுத்தி வந்தனர். கரீனா, வித்யாபாலன் போன்று திருமணத்திற்கு பிறகும் நடிக்கலாம் என்று கூறி வருந்தனர். இருந்தும் ப்ரியங்கா சோப்ரா ஒரு முடிவு சொல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் ப்ரியங்காவின் உறவினர் அவருக்கு ஏற்ற மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார். அதில் பிரபல டி.வி. நடிகர் மொகித் ரெய்னா தான் ப்ரியங்காவுக்கு பொருத்தமாக இருப்பார் என்று எண்ணி அவரை திருமணம் செய்து வைக்க எண்ணினார். மொகித் ரெய்னா ஏராளமான டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தேவன் கீ தேவ் மகாதேவ் எனும் தொடரில் சிவபெருமானாக நடித்து வருகிறார்.
மொகித்தை பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும் என்பதோடு அவர் வளர்ந்து வரும் நல்ல நடிகர், நேர்மையானவர் என்பதால் ப்ரியங்காவுக்கும், அவரது வீட்டில் உள்ள அனைவருக்கும் மொகித்தை பிடித்து போய் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் திருமணம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.