பல்வேறு சிக்கல்களைத் தாண்டி கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தயாரித்த விஸ்வரூபம் இன்று தமிழகம் முழுவதும் திரைக்கு வந்து சேர்ந்தது. காலை முதலே ரசிகர்கள் பெரும் திரளாக கூடி படத்தைப் பார்த்து ரசித்து வருகின்றனர். கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்த படம் விஸ்வரூபம். இப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து படம் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் கோர்ட், தடை நீக்கம், மறு தடை
என்று பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் அரசுத் தரப்பும், கமல் தரப்பும், இஸ்லாமிய அமைப்புகளும் உட்கார்ந்து பேசி சில காட்சிகளை நீக்குவது என்று முடிவானது. அதன் பின்னர் படத்திற்கான தடையை அரசு நீக்கியது.
விஸ்வரூபம் படத்தைப் பார்க்க ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று அலை பாய்ந்து வந்த கமல் ரசிகர்கள், தற்போது தங்களது ஊர்களிலேயே படம் திரைக்கு வந்ததால் பெரும் திரளாக தியேட்டர்களில் குழுமி படத்தைப் பார்த்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, புறநகர்களில் 50க்கும் மேலான தியேட்டர்களில் திரைக்கு வந்துள்ளதாம்.
பெரும்பாலான தியேட்டர்களில் ஒரு வாரத்திற்கான முன்பதிவு முடிந்து விட்டதால் ரசிகர்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளனர். இருப்பினும் தியேட்டர்களில் திரண்டு கட் அவுட்டுக்கு மாலை போட்டு அபிஷேகம் செய்வது உள்ளிட்ட வேலைகளில் மும்முரம் காட்டினர்.
தியேட்டர்களில் படம் ரிலீஸாகி விட்ட நிலையி்ல அடுத்து இப்படம் டிடிஎச்சில் ரிலீஸாகவுள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் கமல் மும்முரமாகியிருப்பதாக தெரிகிறது.