ரஷ்ய நாட்டு ராணுவ ரகசியங்களை வில்லன் கும்பல் கடத்தி சென்று விடுகிறது. அவர்களிடம் இருந்து அதனை மீட்க அமெரிக்க ராணுவ அதிகாரி கடத்தல் கும்பல் தலைவனான வின் டீசலின் உதவியை நாடுகிறார். அவர் அவரது குழுவுடன் லண்டன் வந்து
வில்லனுடன் மோதி பல ரேஸ்கள் நடத்தி ஸ்பெயினுக்கு பறந்து க்ளைமாக்ஸூக்கு வருகிறார். வில்லனை வீழ்த்தி படத்தை முடித்து வைத்து அடுத்த பாகத்திற்கும் அடி போடுகிறார்.
வின் டீசல் கட்டுமஸ்தான உடம்பு சும்மா கிண்ணென்று இருக்கிறது. வெறி கொண்டு அடி அடியென்று அடிக்கிறார். கார் ரேஸில் பின்னுகிறார். முடிவில் வில்லனின் கட்டுமஸ்தான அடியாளை தூக்கி ராக் அடிக்க கொடுக்கும் போது விசில் பின்னுகிறது.
தி ராக் என்று அறியப்பட்ட டிவெய்ன் ஜான்சன் மாமிச மலையாக வருகிறார். இந்த திட்டத்திற்கு அடித்தளமிட்டு படத்தை துவக்கி வைக்கிறார்.
முந்தைய பாகங்களில் வந்தவர்கள் அதே போல் வந்து அசத்தி செல்கிறார்கள்.
என்ன தான் இன்டர்நேசனல் படமாக இருந்தாலும் பாட்ஷா படத்தில் இருந்து காட்சியை சுட்டால் நம்மளால் கண்டுபிடிக்க முடியாதா என்ன. பாட்ஷா படத்தில் ரஜினியும் ரகுவரனும் சந்திக்கும் காட்சியில் மாடியில் ஒரு அடியாளை துப்பாக்கியுடன் நிற்க வைத்து சும்மா அங்க பாரு கண்ணா என்று டயலாக் விடுவார்களே, அதை அப்படியே சுட்டு படமாக்கியிருக்கிறார்கள்.
கார் ரேஸ்கள் படு அசத்தலாக படமாக்கப் பட்டு இருக்கிறது.
க்ளைமாக்ஸ் முன்பு வரும் டாங்கி சேஸிங் பைட்டும் க்ளைமாக்ஸில் வரும் விமான பைட்டும் ஏஒன். ஏன் எதற்கு எப்படி சாத்தியம் என்ற கேள்விகளையும் மூளையையும் கழற்றி வைத்து விட்டு படத்திற்கு சென்றால் ஒன்றரை மணிநேரம் பக்கா ஆக்சன்.
மிகப்பெரிய விமானத்தை இரண்டு ஜீப்களை வைத்து ஜஸ்ட் லைக் தட் என வீழ்த்துவது எல்லாம் காதுல பூக்கூடை.
கொஞ்சம் கூட கவலையேப் படாமல் விமானத்தில் இருந்தும் பாலத்தில் இருந்தும் புல்டோசரிலிருந்தும் ஆளாளுக்கு ஜம்ப் பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள்.
படம் முடிந்து வெளியில் வந்ததும் ட்ராபிக்கில் பாய்ந்து பைக்கை ஓட்டி வீட்டுக்கு வந்தது தான் இந்த படத்தின் தாக்கமும் வெற்றியும்.