எளிதாக ஜோதிடம் கற்பது எப்படி - பாகம் 10

இந்தியாவுக்கு காலை 5.30 மணி என்றால், பாகிஸ்தானுக்கு காலை 5.00 மணி ஆக இருக்கும். அதாவது இந்தியாவின் GMT +5.30 , பாகிஸ்தானின் GMT +5.00, அதனால் இந்திய ஸ்டாண்டர்ட் நேரத்திற்கும், பாகிஸ்தான் ஸ்டாண்டர்டு நேரத்திற்கும் உள்ள வித்தியாசம் 30 நிமிடங்கள். எடுத்துக்காட்டாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள
அகமதாபாத்திற்கும், பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்திற்கும் இடைப்பட்ட நேர வித்தியாசம் 30 நிமிடங்கள். (இந்த இரு நகரங்களுக்கும் இடைப்பட்ட தொலைவு எவ்வளவு தெரியுமா? சுமார் 600 கி.மீ. மட்டுமே). இவ்வாறு 600 கி. மீ. தொலைவு உள்ள இரு நகரங்களுக்கும் இடையே 30 நிமிட வித்தியாசம் என்றால், பெரிய நாடான இந்தியாவிற்குள்ளேயே இருக்கும் நகரங்களான மும்பாய்க்கும், கல்கத்தாவுக்கும் (சுமார் 1800 கி.மீ. தொலைவு) எப்படிங்க ஒரே நேரமாக இருக்க முடியும்? ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

இந்திய ஸ்டாண்டர்ட் நேரம், எங்கே மிகச் சரியாக இருக்கும் தெரியுமா? உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரத்தில் மட்டுமே. ஏனெனில் இந்திய ஸ்டாண்டர்ட் நேரம் கிரீன்விச்சிலிருந்து 82 பாகை 30 கலை கிழக்கே (ரேகாம்சம்) உள்ள அலகாபாத் நகரத்தைப் பொறுத்தே கணக்கிடப்படுகிறது. 1 பாகைக்கு 4 நிமிடங்கள் என்ற அளவிலேயே கணக்கிட வேண்டும். 82 பாகை 30 கலை என்பதை 82.5 பாகை எனக்கொள்வோம் ( 30 கலை என்பது 1/2 பாகை என்பதால் .5 என்று எடுத்துக்கொள்வோம்), அப்படி என்றால் 82.5 x 4 நிமிடம் = 330 நிமிடங்கள் அதாவது 5 மணி 30 நிமிடங்கள். இப்படித்தான் இந்தியாவின் +5.30 GMT அலகாபாத் நகரத்தைப் பொறுத்து உருவானது. அதாவது கிரீன்விச்சில் நள்ளிரவு 00.00 மணி எனில் அலகாபாத்தில் காலை 5.30 மணியாக இருக்கும். இது தான் அலகாபாத் நகரின் உள்ளூர் மணி (LMT - Local Mean Time). இதையே பொது மக்களின் எளிய பயன்பாட்டிற்காக இந்தியா முழுமைக்கும் பயன்படுத்துமாறு இந்திய ஸ்டாண்டர்ட் நேரமாக (IST) அறிவிக்கப்பட்டது. 

ஆக, நாம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் நேரம் அலகாபாத்தின் உள்ளூர் மணியாகும். ஆனால் அறிவியல் ரீதியாகவும், ஜோதிடவியல் ரீதியாகவும் பார்த்தோமானால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திற்கும் உள்ளூர் மணி வேறுபடும். உள்ளூர் மணிதான் மிகச் சரியான, துல்லியமான நேரமாகும். அதனால் தான் ஜாதகம் கணிக்க உள்ளூர் நேரத்தை முதலில் கணக்கிடுவார்கள். அதற்கு நமக்கு கடந்த பதிவில் பார்த்த ரேகாம்சம் பயன்படுகிறது.

இப்பொழுது சென்னையின் உள்ளூர் மணி கணக்கிடுவோம். சென்னையின் ரேகாம்சம் 80° 17' E என கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கிரீன்விச்சிலிருந்து கணக்கிட்டோமெனில் 321 நிமிடங்கள் வரும். அதாவது 5 மணி 21 நிமிடங்களே வரும். அப்படி யெனில் இந்திய ஸ்டாண்டர்ட் நேரம் 5 மணி 30 நிமிடமாக இருக்கும் போது, சென்னையில் உள்ளூர் நேரம் 5 மணி 21 நிமிடங்களாக இருக்கும். இதுதான் சென்னையின் மிக சரியான நேரமாகும். அதாவது சென்னையின் உள்ளூர் மணி அலகாபாத்தின் உள்ளூர் மணியை விட, அதாவது இந்திய ஸ்டாண்டர்ட் நேரத்தை விட 9 நிமிடம் குறைவாக இருக்கும். இவ்வாறு பல நகரங்களுக்கும், சரியான உள்ளூர் மணியைக் கணக்கிடலாம்.

என்ன தலை சுற்றுகிறதா? பல முறை படித்து, எழுதி கணக்கிட்டுப் பார்த்தால் எளிதில் விளங்கும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget