டிமான்ட்டி காலனி விமர்சனம்

நடிகர் : அருள்நிதி
இயக்குனர் : ஆர் அஜய் ஞானமுத்து
இசை : கேபா ஜெரமியா
ஓளிப்பதிவு : அரவிந்த் சிங்


நண்பர்களான அருள்நிதி, ரமேஷ் திலக், ஷனத், அபிஷேக் ஜோசப் அனைவரும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். இதில் அருள்நிதி எந்த வேலைவெட்டிக்கும் செல்லாமல், வேறொருவர் மனைவியை உஷார் செய்து, அவளிடம் பணத்தை கறந்து நண்பர்களுக்கு செலவு செய்து வருகிறார். ரமேஷ் திலக் போட்டோ டிசைனில் பயங்கரமான ஆள். ஷனத், கதை எழுதி வைத்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையுடன் வாய்ப்பு தேடி வருகிறார். அபிஷேக் ஜோசப் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.

எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் செல்லும் இவர்களது வாழ்க்கை போதை, அரட்டை என செல்கிறது. ஒருகட்டத்தில் வாழ்க்கையில் ஏதாவது சுவாரஸ்யம், திகில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நண்பர்களுக்கு இயக்குனரான ஷனத், தான் எழுதிய டிமான்ட்டி காலனியில் உள்ள ஒரு வீட்டை பற்றி கூறுகிறான். பாழடைந்த அந்த வீட்டுக்கு செல்ல அனைவரும் முடிவெடுக்கின்றனர்.

அதன்படி, அந்த பாழடைந்த வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு சென்ற நண்பர்களில் ஒருவன்,  அங்கிருக்கும் ஒரு விலையுயர்ந்த நகை ஒன்றை திருடி வந்துவிடுகிறான். அதை வைத்து வாழ்க்கையில் செட்டிலாகிவிட துடிக்கிறார்கள் அனைவரும். மறுநாள், அதே வீட்டுக்கு செல்ல நண்பர்கள் நினைக்கின்றனர். ஆனால், பலத்த மழை பெய்யவே, வீட்டிலேயே பேய் படம் பார்க்க முடிவெடுக்கிறார்கள். 

நண்பர்களில் இருவர் உறங்கிவிட, மற்ற இருவர் மட்டும் பேய் படம் பார்க்கத் தொடங்குகிறார்கள். அப்போது டிவி திரையில் நண்பர்கள் அனைவரும் அந்த வீட்டுக்குள்ளேய அடுத்தடுத்து இறப்பது போன்ற காட்சிகள் வருகிறது. இதை பார்த்ததும் அவர்கள் பயந்து போகிறார்கள்.

எனவே, அங்கிருந்து தப்பித்துப்போக நினைக்கிறார்கள். ஆனால், அந்த வீட்டின், ஜன்னல், கதவு என எதையும் திறக்க முடிவதில்லை. மேலும், இவர்கள் வீட்டுக்குள் இருந்து யாரிடம் உதவி கேட்டாலும், அது வெளியில் கேட்பதில்லை. தொலைபேசியில் தொடர்புகொண்டு உதவி கேட்க முயன்றாலும், தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. 

இதையெல்லாம் மீறி நண்பர்கள் அனைவரும் அந்த வீட்டில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதை திகில் கலந்த காமெடியுடன் சொல்லியிருக்கிறார்கள். 

நாயகன் அருள்நிதிக்கு இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். அடுத்தவன் மனைவியை உஷார் செய்து, அவள் கொடுக்கும் பணத்தில் நண்பர்களுக்கு செலவும் செய்யும் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து தைரியமாக நடித்ததற்காகவே அருள்நிதியை பாராட்டலாம். இந்த படத்தில் இவருடைய நடிப்பும் பலே. முகத்தில் கொடுக்கும் முகபாவனைகள் எல்லாம் சூப்பர். 

இவர் நாயகன் என்றாலும், படத்தில் வரும் மற்றவர்களான ரமேஷ் திலக், ஷனத், அபிஷேக் ஜோசப் ஆகியோருக்கும் இவருக்கு சமமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதை அவர்களும் திறமையாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக, போட்டோ டிசைனில் கைதேர்ந்தவரான ரமேஷ் திலக், பிரவுசிங் சென்டரில் சாட் செய்துகொண்டிருக்கும் காட்சிகள் சிரிப்புக்கு கியாரண்டி.

இப்படத்தில் கள்ளக்காதலியாக வரும் மதுமிதா மட்டுமே பெண். மற்றபடி, இந்த படத்தில் நாயகி என்பது இல்லை. தான் மட்டுமே பெண் என்பதால், கிடைத்த இடத்தில் எல்லாம் தனது நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார். விரல் ரேகை நிபுணராக வரும் எம்.எஸ்.பாஸ்கரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பேய் படங்களில் காமெடியை நுழைத்து வெளிவந்து கொண்டிருக்கும் பேய் படங்களில், ஒரு சீரியஸ் பேய் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இரண்டாம் பாதி முழுக்க ஒரு அறையிலேயே நடந்தாலும், அதை சுவாரஸ்யமாக கொடுப்பதற்கு நிறையவே தைரியம் வேண்டும். அதை சிறப்பாக செய்திருக்கிறார். இடைவேளைக்கு பிறகு படம் நகர்வதே தெரியவில்லை. இவர்கள் திரையில் வரும் காட்சிக்கு பிறகு, கடைசி வரை திகிலை கொஞ்சம்கூட குறைக்காமல் இறுதி வரை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

படத்திற்கு பெரிய பலம் கேபா ஜெரமியாவின் பின்னணி இசைதான். இவருடைய திறமையான இசை நம்மை ஒவ்வொரு இடத்திலும் பயமுறுத்துகிறது. அதேபோல், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் படத்தை திகிலோடு நகர்த்த உதவியிருக்கிறது.

மொத்தத்தில் ‘டிமான்ட்டி காலனி’ திகில் ஏரியா.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget