நடிகர் தனுஷ் 'சுத்தத் தமிழில்' எழுதிப் பாடி தரணியெங்கும் புற்றுநோய் போல பரவி விட்ட ஒய் திஸ் கொலை வெறிப் பாடலை மேற்கோள் காட்டி இலங்கை நாடாளுமன்றத்தில், இலங்கை ஆளும் கட்சி எம்.பி ஒருவர் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும், முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியையும் சாடிப் பேசியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் கலந்து கொண்டு அந்த நாட்டு ஆளும் கட்சி எம்.பியான அஸ்வர் என்பவர் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
தமிழ்நாட்டுகாரர்களுக்கு கொலை வெறி பிடித்துள்ளது. அதனால் தான் அவர்கள் இன்று கொலை வெறி கொலை வெறி என பாடல்களில் கூட பாடுகின்றனர். இந்தக் கொலை வெறி பாடலுக்கு எமது யாழ்ப்பாண இளைஞன் பதிலடி கொடுத்து பாடியுள்ளார். அந்தப் பாடலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
இலங்கையில் ஜே.வி.பி.யினர் கொலை வெறியுடன் திரிகின்றனர். கொலை வெறியுடன் யாழ்ப்பாணம் சென்று அடிவாங்கிக் கொண்டு திரும்பி வந்துள்ளனர் என்ற அவர் ஜேவிபி எனப்படும் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் எம்.பியான சுனில் ஹந்து நெத்தி என்ற எம்.பியைப் பார்த்து ஒய் திஸ் கொலை வெறி என்று கேட்டார். அதற்கு சுனில் நோ கொலை வெறி என்று இரண்டு வாட்டி சொன்னார். இதைக் கேட்டு அத்தனை பேரும் கொள்ளென வயிறு குலுங்கச் சிரித்தனர்.
தமிழ்நாட்டுக்காரர்களைப் பார்த்து இப்படி சிரிப்பா சிரிக்க வச்சுட்டீங்களே தனுஷ், 'வால்க வளமுடன்'!