5000 பேர் சேர்ந்து தயாரிக்கும் புதிய படம் முயல். போட்டோகிராபர்களும், வீடியோகிராபர்களும் மட்டும் இணைந்து அந்த படத்தை தயாரிக்க உள்ளனர். போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸின் பி அண்ட் வி எண்டர்டெயின்மெண்ட் லிட் என்ற நிறுவனம் சார்பில் தயாராகும் இப்படத்தில், கண்டுபுடி கண்டுபுடி, புழல் படங்களில் நடித்த முரளி ஹீரோவாகவும், போராண்மை சரண்யா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராஜ்குமார்,
பிரபு, மீரா கிருஷ்ணன், ஷிவானி உள்பட பலரும் நடிக்கிறார்கள்.
வாழ்க்கையில் எந்த துன்பத்தையும் அனுபவித்திராத மூன்று நண்பர்கள், கல்லூரிப் படிப்பு முடிந்து ஏதாவது ஒரு தொழில் செய்யலாம் என இறங்கும்போது, அவர்களின் வாழ்ககையையே புரட்டிப் போடுகிறது ஒரு சம்பவம். தங்களுக்கு வந்த அந்த கஷ்டம் வேறு யாருக்கும் வராமல் இருக்க அவர்கள் செய்யும் முயற்சிகள்தான் முயல் படத்தின் மொத்த கதையும்.
மதுரை டு ஆண்டிப்பட்டி, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி போன்ற வித்தியாசமான முயற்சிகளில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய எஸ்.பி.எஸ். குகன் இப்படத்தை இயக்குகிறார். ஜேவி இசையமைக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழாவிலேயே பாடல்களை வெளியிட்டு அசத்தியுள்ளனர் முயல் படக்குழுவினர்.