ஒரு வழியாக நடிகை சங்கவிக்கு திருமணம் முடிவாகிவிட்டது. அமெரிக்காவை சேர்ந்த டாக்டரை திருமணம் செய்ய இருக்கிறார். அமராவதி படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சங்கவி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். ஒருகாலத்தில் விஜய்யின் ஆஸ்தான நடிகையாக திகழ்ந்தவர் சங்கவி தான். விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட
20 ஆண்டுகள் ஆகியும் நடிகை சங்கவி திருமணம் செய்யாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் சங்கவிக்கு திருமணம் முடிவாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டாக்டரை அவர் கரம்பிடிக்க இருக்கிறார். சென்னையில் அடுத்த மாதம் நிச்சயதார்த்தமும், அதனைத்தொடர்ந்து திருமணம் மார்ச் மாதமும் நடைபெற இருக்கிறது. தற்போது ஓரிரு படங்களில் நடித்து வரும் சங்கவி, திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு, கணவருடன் அமெரிக்காவில் போய் செட்டிலாக முடிவெடுத்திருக்கிறார்.