ராமராஜன் கதாநாயகராக நடித்து, நீண்ட காலத் தயாரிப்பில் இருந்து, நீண்ட இடைவெளிக்குப்பின் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "மேதை"!
கதைப்படி, ராமராஜன் ஒரு பள்ளிக்கூட்டத்தில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர். நல்லாசிரியர் விருது பெறும் அளவிற்கு தகுதியும், திறமையும் வாய்ந்த அவருக்கு, ஏழை மாணவர்கள் பள்ளிக்கட்டணம் கட்டமுடியாமல் படும்
அவதிகளைப் பார்த்து, அவர்களுக்கு உதவிடும் வண்ணம் ஒரு அறக்கட்டளையை தொடங்கிடும் எண்ணம் உதிக்கிறது அதன்படி உடன்பணிபுரியும் ஆசிரியர்கள், உதவிடும் உள்ளம் படைத்தோர் உள்ளிட்டோர் உதவியுடன் ஒரு அறக்கட்டளையை தொடங்கும் ராமராஜன், அதன்மூலம் ஏழை மாணவர்களையும், வேலைக்கு போகும் சிறுவர்களையும் படிக்க வைக்கிறார்.
இது அதே ஊரில் சிறுவர்களின் படிப்பை கெடுத்து அவர்களை வைத்து வேலை வாங்கி தொழில் செய்யும் வில்லன் கோட்டை குமாருக்கு கடும் கோபத்தை உண்டாக்குகிறது. ராமராஜனின் அறக்கட்டளைக்கு தலைவராகவும் இருக்கும் கோட்டைகுமார், பொருளாளர் ராமராஜன் மீது ஊழல் புகார்களை சுமத்தி அவரை சிறைக்கு அனுப்புகிறார். கூடவே ராமராஜனின் குடும்பத்தையும் தீர்த்து கட்டுகிறார். சிறை சென்று திரும்பும் ராமராஜன், வில்லன் கோட்டை குமாருக்கு எவ்வாறு பாடம் புகட்டுகிறார்? ஏழை எளிய மாணவர்களுக்கு எவ்வாறு சேவை செய்கிறார்...? என்பது மேதை படத்தின் மீதிக்கதை!
அதே ஹேர்ஸ்டைல், அதே வேஷ்டி-சட்டை-காஸ்டியூம் என்று நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டு(ம்) வந்திருக்கும் ராமராஜன், சற்றே சதைபோட்டு காணப்படுவதுடன் ஆடல், பாடல் காட்சிகளில் கோட் ஷுட்டும் போட்டு அசத்துகிறார். பக்கம் பக்கமாக டயலாக் பேசுவதுடன் பஞ்ச் டயலாக்கும் பேசி கலகலப்பு ஊட்டுவதுடன், சில சமயங்களில் காண்போருக்கு களைப்பும் ஊட்டுகிறார்.
புதுமுக நாயகி கவுசிகா வந்ததும் போவதும் தெரியாமல் வந்து போகிறார். ராமராஜனின் உதவியாளராக சார்லி, இளம் காதல் ஜோடிகள் அஜெய்-ஹாசினி, வில்லன் கோட்டை குமார், கெட்ட போலீஸாக இருந்து நல்ல போலீஸாகும் ராஜ்கபூர், காமெடி எனும் பெயரில் கடிக்கும் கஞ்சா கருப்பு அண்ட் கோவினர் மற்றும் கே.நட்ராஜ், பாண்டு உள்ளிட்ட பலமுகங்கள் படம் முழுக்க பரவிக்கிடப்பது படத்தின் பலமா.? பலவீனமா..? தெரியவில்லை!
தினா இசையில் பாடல்கள் பளிச்! ஆர்.ஹெச் அசோக்கின் ஒளிப்பதிவு ப்ச்!! தமிழ் ஆசிரியர் ராமராஜன் ஒரு காட்சியில் கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் எடுப்பது, வில்லன் கோட்டை குமாரை அவசியமே இல்லாமல் தேடிப்பிடித்து அறக்கட்டளை தலைவராக்குவது... போன்ற புரியாத புதிர் சமாச்சாரங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் என்.டி.ஜி.சரவணன் எழுத்து-இயக்கத்தில் "மேதை" ராமராஜனின் ரீ-எண்ட்ரிக்கு "புதிய பாதை"! ரசிகர்களுக்கு...?!