தலைப்பிலுள்ள வார்த்தையைத்தான் அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டியிருக்கிறது. ‘ஒன் ஃபார் த மணி’ நாவலை எழுதியவர், அந்த நாவலை அதே பெயரில் படமாக இயக்குபவர், ஹீரோயின் ஓரியண்டட் படம் என்பதால் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர்... என சகலரும் பெண்களே. அதுவும் ஸ்வீட் ராட்சஷிகள். ஸ்டெப் பை ஸ்டெப் ஆக வருவோம். ஆங்கில கதைப் புத்தகங்களை விழுந்து விழுந்து வாசிப்பவர்களுக்கு பரிட்சயமான பெயர், ஜேனட் இவானோவிச். த்ரில்லர்
நாவல்களுக்கு பெயர் போனவர். அமெரிக்காவை சேர்ந்த இவர், தொடக்கத்தில் மாதம்தோறும் ஒரு காதல் நாவலை ஸ்டெஃபி ஹால் என்ற பெயரில் எழுதி வந்தார். புற்றீசல் போல் இவர் எழுதிக் குவித்த இந்த வகை ரொமான்ஸ் நாவல்களால் இவருக்கு பெயரும் கிடைக்கவில்லை. டப்பும் நிறையவில்லை. ரூம் போட்டு யோசித்தவர், சட்டென்று தன் ரூட்டை த்ரில்லருக்கு மாற்றினார். ஆனால், பத்தோடு பதினொன்றாக இல்லாமல் அதில் தன் முத்திரையை பதிக்க முயன்றார் பாருங்கள்... அதுதான் இன்று இவரை உச்சாணிக் கொம்பில் அமர வைத்திருக்கிறது.
வேறொன்றுமில்லை. வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு கம்பி நீட்டும் வழக்கம் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறதல்லவா..? அதைத்தான் சென்டர் பாயிண்ட் ஆக எடுத்துக் கொண்டார். இப்படி தப்பி ஓடியவர்களை கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு கணிசமான கமிஷனை வங்கிகள் வழங்குகின்றன. எனவே இந்தத் ‘தேடுதலில்’ ஈடுபடுவது என்பதே ஒரு தொழிலாக அங்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் ‘தொழிலை’, அக்கு வேறு ஆணி வேறாக இரண்டு ஆண்டுகள் அலசி ஆராய்ந்த ஜேனட், முறைப்படி துப்பாக்கி சுடவும் கற்றுக் கொண்டு ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை படைத்தார். அந்த கேரக்டரின் பெயர், ஸ்டெஃபனி ப்ளம். இந்த இளம் பெண், சாகசம் செய்து, மறைந்து வாழும் வாடிக்கையாளரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் ‘ஒன் ஃபார் த மணி’ நாவலின் உள்ளடக்கம். 1994ல் வெளியான இந்த நாவல், பிரபஞ்சம் எங்கும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து 75 வாரங்கள் டாப் செல்லர் பட்டியலில் இடம் பிடித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த நாவலின் சக்சஸ், ஜேனட் இவானோவிச்சுக்கு அசாத்திய துணிச்சலை ஏற்படுத்தியது. ஸ்டெஃபனி ப்ளம் கேரக்டரை வைத்து அடுத்தடுத்து 18 நாவல்கள் வரை எழுதிவிட்டார். எல்லாமே பம்பர் ஹிட். எல்லாமே, வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத மாஃபியாக்களை கண்டுபிடிக்கும் ‘மயிர்க்கூச்செரியும்’ சாகசங்கள் நிரம்பிய காவியங்கள்தான்.
இப்படி லட்டு மாதிரி கதை கிடைத்த பிறகு, ஹாலிவுட் சும்மா இருக்குமா? பாய்ந்து சென்று ரைட்ஸ் வாங்கி விட்டார்கள். ஸ்டெஃபனி ப்ளம், இந்த பூவுலகில் அவதரிக்க காரணமாக இருந்த முதல் நாவலான ‘ஒன் ஃபார் த மணி’ நாவலை, அதே பெயரில் படமாக எடுத்து விட்டார்கள். கதையின் நாயகியாக நடித்திருப்பவர், கேதரீன் ஹீஜில். இவரும் எழுத்தாளர் ஜேனட் இவானோவிச் போன்றே கேரியர் க்ராஃபை கொண்டவர்தான். எண்ணற்ற திராபையான ஹாலிவுட் ரொமான்ஸ் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், ஸ்டீரியோ டைப் கதைகள், நடிக்க வாய்ப்பில்லாத காட்சிகள் என கடலில் கலந்த பெருங்காயமாக தன் திறமை வீணாவதைக் கண்டு பல நாட்கள் தூக்கமின்றி தவித்தவர். சரியான தருணத்தில் ஸ்டெஃபனி ப்ளம் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வரவே, கப்பென்று பிடித்துக் கொண்டிருக்கிறார்.இயக்கியிருப்பவர், ஜூலி அனே ராபின்சன். இங்கிலாந்தை சேர்ந்த இவர், பிபிசியில் வெளியான புகழ்பெற்ற ‘ப்ளாக்பூல்’ மினி தொடரின் ஆரம்ப இயக்குநர். இதற்காக க்ளோடன் க்ளோப் விருதையும் பெற்றிருக்கிறார். ‘தி லாஸ்ட் சாங்’ திரைப்படம், இவருக்கு நல்ல விசிடிங் கார்ட். மொத்தத்தில், மணி... மணி... மணி... வேறென்ன சொல்ல?!