அக்னிபாத் வெற்றி விழா விருந்துக்கு வந்த பிரபல பெண் இயக்குநர் ஃபராகானின் கணவரும் இயக்குநருமான சிரீஷ் குந்தை கடுமையாக அடித்து உதைத்தார் நடிகர் ஷாரூக்கான்.
ஃபராகானும் ஷாரூக்கும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிப்பில் வெளியான அக்னிபாத் படம் வெற்றியடைந்ததை முன்னிட்டு மும்பை புறநகரில் உள்ள உணவகத்தில் சஞ்சய் தத் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நடிகர் ஷாருக்கான் விருந்துக்கு வந்தார்.
விருந்து நடந்து இடத்திற்குள் நுழைந்த ஷாருக்கான் அங்கு நின்று கொண்டிருந்த இயக்குநர் சிரிஷ் குந்தரை நோக்கி வேகமாக சென்றார். பின்னர் திடீரென அவருடைய நீளமான தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். சிரிஷ் குந்தர் முகத்தில் ஷாருக்கான் மாறிமாறி குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த உணவகத்தின் உரிமையாளரான பாபா தீவான் தலையிட்டு ஷாருக்கானை பிடித்து வேறுபக்கமாக அழைத்துச் சென்றார். ஆனால் அவரை வெளியேறச் சொன்னார் ஷாரூக். உடனே சஞ்சய் தத் தலையிட்டு, ஷாரூக்கை அழைத்துச் சென்றுவிட்டாராம். அவர் மட்டும் வராமலிருந்திருந்தால் நிலைமை மிக மோசமாகிவிட்டிருக்கும் என்கிறார்கள்.
பின்னர் இயக்குநர் சிரிஷ் குந்தர், விருந்து நடந்த இடத்திலிருந்து வேகமாக வெளியேறினார். அப்போது அவருடைய முகம் முழுவதும் வீங்கி காணப்பட்டது.
சிரிஷ் குந்தரின் மனைவி பிரபல இயக்குநர் ஃபராகான் ஆவார். இவரும், ஷாருக்கானும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். ஷாரூக் தனது மே ஹுன் நா மற்றும் ஓம் ஷாந்தி ஓம் படங்களை இயக்கும் வாய்ப்பை ஃபரா கானுக்கு தந்திருந்தார். ஏராளமான படங்களில் ஷாரூக்கானுக்காக நடனம் அமைத்தவர் அவர்தான். ஆனால் தீஸ் மார் கான் படத்தில் ஃபராகான் அக்ஷய் குமாரை ஒப்பந்தம் செய்ய, பிரச்சினை ஆரம்பமானது.
சிரீஷ் குந்தரும் ஒரு காலத்தில் ஷாரூக்கின் நண்பராக இருந்தார். ஆனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஷாரூக்கை மோசமாக கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார். இதனால் அவர் இயக்கிய ஜோக்கர் படத்துக்கு ஷாரூக் கால்ஷீட் கொடுக்கவில்லை. அந்த கோபத்தில், ஷாரூக்கின் ரா ஒன் படம் குறித்து கேவலமான விமர்சித்திருந்தாராம் சிரிஷ்.
இந்த நிலையில், நேற்றைய விருந்துக்கு வந்த ஷாரூக்கை மிகவும் கோபப்படுத்தும் விதத்தில் சிரீஷ் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த கோபத்தில்தான் ஷாரூக் வெளுத்தாராம். எனினும் இதுபற்றி போலீசில் புகார் தரப்போவதில்லை என்று பாராகான் தெரிவித்து உள்ளார்.
"ஒருவரை அடிப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அது மோசமான விஷயம் என்றும் அடிக்கடி கூறுவார் ஷாரூக். அவரா இப்படிச் செய்தார் என்று ஆச்சர்யமாக உள்ளது," என்றார் ஃபாராகான்.
இந்த சண்டையின் போது நேரில் பார்த்த அனைவருமே, ஷாரூக் பக்கம் தவறில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.
2008-ம் ஆண்டு கத்ரீனா கைஃபின் பிறந்த நாள் விருந்தில் ஷாரூக்கானும் சல்மான் கானும் கைகலப்பில் இறங்கி பெரும் பிரச்சினையானது நினைவிருக்கலாம்!