"மைனா" விதார்த்திற்கு மீண்டும் ஒரு மணிமகுட வெற்றியை தந்திருக்கும் படம் "கொள்ளைக்காரன்" எனலாம்! திருமண வயதாகியும், தம்பி தங்கைகளுக்காக பெரிய ரைஸ் மில்லில் கூலி வேலைக்கு போகும் அக்கா, உடம்பும் மனதும் முடியாத தங்கை இவர்களுடன் பிறந்திருந்தாலும் விதார்த்திற்கு, தான் ஒரு ராஜகுமாரன் எனும் நினைப்பு! அதன் விளைவு நினைப்புதான் பொழைப்பை கெடுக்கும் எனும் பழமொழிக்கேற்ப
ஆடு, மாடு, கோழி திருடி உல்லாச வாழ்க்கை வாழுகிறார். இதனால் ஊர் பஞ்சாயத்து முன் அடிக்கடி நிற்க வேண்டிய நிலை விதார்த்தின் அக்கா செந்திக்கு! அதனால் அக்கா-தம்பிக்குள் அடிக்கடி பாச சண்டை!
இந்நிலையில் கொள்ளைக்காரன் விதார்த்தை கொள்ளையடிக்கிறார் டுடோரியல் காலேஜ் மாணவி சஞ்சிதா ஷெட்டி! இவரது காதல் விதார்த்திற்கு யதார்த்த வாழ்க்கையை உணர்த்த கொள்ளைக்காரன் விதார்த் யதார்த்திற்கு திரும்பினாரா...? காதலியை கைபிடித்தாரா, அக்காவின் மனங்கவர்ந்தாரா...? இல்லையா...? என்பது வித்தியாசமும், விறுவிறுப்புமான கொள்ளைக்காரன் படத்தின் மனதை கொள்ளை கொள்ளும் மீதிக்கதை!
விதார்த், யதார்த்தமான கொள்ளைக்காரனாக நடித்து "மைனா", "முதல்இடம்" படங்களில் கிடைத்த நல்ல பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறை ஆடு, மாடுகளை திருடி, அதில் கிடைக்கும் பணத்தில் புது டிரஸ், புது கெட்-அப்பில் வரும் விதார்த்தை அஜித் மாதிரி இருக்கே... விஜய் மாதிரி இருக்கே... என யார் வாயிலாவது புகழச்சொல்லி கேட்கும் இடங்களில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் பலே பலே!
கதாநாயகி சஞ்சிதா ஷெட்டியைக் காட்டிலும், விதார்த்தின் அக்காவாக வரும் செந்தியின் நடிப்பு பிரமாதம்! ரவிசங்கர், தாஸ், கிரேன் மனோகர், செல்லத்துரை, செல்வம், பேபி வர்ஷா, மோகன் வைத்யா உள்ளிட்டோர் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!
யுவராஜின் அழகிய ஒளிப்பதிவு, ஜோகனின் இனிய இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள், தமிழ் செல்வனின் எழுத்து-இயக்கத்திற்கு மகுடம் சேர்த்து இருக்கிறது! பஸ்ரூட்டை மாற்றிவிட்டு, காதலியை இறங்கி வரச் செய்யும் விதார்த்தின் காதல் சேட்டைகள் மட்டுமல்ல களவு சேட்டைகளும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ள காரணம் என்றால் மிகையல்ல!