எண்டர்டெய்ண்மெண்ட் அன் லிமிட்டெட் சார்பில், புதுமுகம் கமல் இயக்கி வரும் படம் மறுமுகம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் இன்னொரு முகம் தான் மறுமுகம் படத்தின் கதை.
இன்றைய நாகரீக உலகில் அன்புக்கு ஏங்கும் பணக்கார இளைஞர்கள் நிறைய பேர் உண்டு. தன்னை யாராவது நேசிக்கமாட்டார்களா...? என ஒரு பணக்கார இளைஞன் ஏங்கும்போது, ஒரு பெண்ணின்
மீது காதல் கொள்கிறான். ஆனால் அந்தப்பெண்ணோ, வாழ்க்கையில் முன்னுக்கு வரத்துடிக்கும் வேறு ஒரு பையனிடம் மனதை பறிகொடுக்கிறாள். உள்ளுக்குள்ளே காதலை வைத்துக் கொண்டு, அதை அடைவதற்காக காய் நகர்த்தும் உச்சக்கட்ட த்ரில்லரை சொல்கிறது ‘மறுமுகம்’.
இதில் பணக்கார பையனாக டேனியல் பாலாஜியும், அவருடன் இன்னொரு நாயகராக சிக்கு புக்கு அனுப்பும், நாயகியாக மும்பை இறக்குமதி ரன்யாவும் நடிக்கின்றனர். மலேசியாவில் வெளிவந்த 12-ஹவர்ஸ் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய கமல், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
திரைப்படக்கல்லூரி மாணவனான கனகராஜ் (மலேசிய தமிழ்படம் ‘12-ஹவர்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளர் இவரே). ஒளிப்பதிவு செய்ய, அகஸ்தியா இசையமைக்கிறார். எண்டர்டெய்ண்மெண்ட் அன் லிமிட்டெட் சார்பில் சீனுவும், நிர்மலும் கவனிக்க, இணைந்து தயாரிக்கிறார் சங்கீதா ரெபெக்கா. சென்னை கடற்கரை மற்றும் அதன் சுற்று பகுதிகளிலும், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.