குடும்பம் என்று இருந்தால் அடிதடி சண்டை இருக்கத்தான் செய்யும். இதெல்லாம் சாதாரணம். பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது, என்றார் நேற்று இயக்கநர் ஃபராகான் கணவர் சிரிஷ் குந்தரை புரட்டியெடுத்த ஷாரூக்கான். நேற்று முன்தினம் சஞ்சய் தத்தின் அக்னிபாத் பட விருந்தில் சிரிஷ் குந்தரை அடித்துவிட்டார் ஷாரூக்கான். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அடுத்த சில மணி நேரங்களுக்குள் அடித்துக்கொண்ட இருவரையும் சமாதானப்படுத்தினர், ஃபராகானின் சகோதரர் சஜித் கானும் பிரபல தயாரிப்பாளர் சஜித் நாடியாவாலாவும்.
இதன் விளைவு நேற்று மும்பை மன்னாட்டில் உள்ள ஷாரூக்கான் வீட்டுக்கு ஃபராகானும் சிரிஷ் குந்தரும் சென்றனர்!
ஷாரூக்கானை நேரில் சந்தித்து இருவரும் மனம் விட்டுப் பேசினர். பின்னர் வெளியில் வந்த சிரிஷ், "அன்றைக்கு என்ன நடந்ததென்று யாருக்குமே தெரியாது. அவரவருக்குத் தெரிந்ததை சொல்லிவிட்டனர். ஆனால் நாங்கள் எங்களுக்குள் இருந்த மன வேறுபாடுகளைத் தீர்த்துக் கொண்டோம். இப்போது நாங்கள் நல்ல நண்பர்கள்," என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "சண்டை நடக்காத பார்ட்டி ஏது... அன்று நன்றாகக் குடித்திருந்தோம். ஏதோ விவாதம்... மனதுக்குள் இருந்த ஆத்திரத்தை கொட்டிவிட போதை ஒரு வாய்ப்பு... அப்படி வந்த சண்டைதான் அது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. முன்னை விட நாங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். குறிப்பாக எனக்கும் ஷாரூக்கானுக்கும் இருந்த பிரச்சினை மட்டுமல்ல... என் மனைவி ஃபராவுக்கும் ஷாரூக்குக்கும் இருந்த வேறுபாடுகள் கூட நீங்கிவிட்டன. இந்த சண்டை கூட நல்லதுக்குதான்," என்று கூறியுள்ளார்.
இயக்குநர் ஃபராகான் கூறுகையில், "நாங்கள் ஷாரூக் வீட்டில் 3 மணி நேரம் இருந்தோம். பேசினோம், சிரித்தோம், நெகிழ்ந்தோம், அழுதோம்... இப்போது எல்லாம் நல்லபடியாக முடிந்தது. என் தம்பிக்கும், தயாரிப்பாளர் நாடியாவாலாவுக்கும் நன்றி," என்றார்.
இதுகுறித்து ஷாரூக்கான் தனது ட்விட்டரில், "குடும்பத்துக்குள் சண்டை வருவது போலத்தான் இது. எல்லாம் நன்மைக்கே," என்று தெரிவித்துள்ளார்.