சில படங்களைப் பார்க்கையில் அப்படியே உறைந்து போய்விடுவோம். இது பயமுறுத்தி உட்கார வைப்பதல்ல, ஆச்சரியத்தில் உறைய வைப்பது. பிளாக் ஸ்வானைப் பார்த்த போது அப்படிதான் உணர்ந்தேன். ஹாலிவுட்டிலிருந்து வந்திருக்கும் ஒரு நல்ல திரைப்படம். நினா என்ற இளம் பெண் ஒரு பாலே டான்சர். அவர்களது பாலே ட்ரூப்பில் நடன நிகழ்ச்சி நடத்தயிருக்கிறார்கள்.
அதற்காக அந்த ட்ரூப்பின் பயிற்சியாளர் தாமஸ் நடனக் கலைஞர்களைத் தேர்வு செய்கிறார். தோந்தெடுக்கப்படும் நடனக் கலைஞர் நல்ல குணங்கள் உள்ள சாந்தமான ஒயிட் ஸ்வானாகவும், ஆக்ரோஷமான பிளாக் ஸ்வானாகவும் ஆட வேண்டும். தேர்வு செய்யப்படுவது மிகப் பெரிய கவுரவம்.
தாமஸ் நினாவை தேர்வு செய்கிறார். அதேநேரம் ஒயிட் ஸ்வானாக நினாவின் நடனம் சிறப்பாக இருப்பதாகவும், கறுப்பு அன்னத்துக்கான கிளர்ச்சி அவளிடம் இல்லை எனவும் குறைபட்டுக் கொள்கிறார். இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால் தேர்வு செய்யப்படும் நடனக் கலைஞருக்கு கொடுக்கப்படும் எல்லா பயிற்சிகளும் வேறொரு நடனக் கலைஞருக்கும் கொடுக்கப்படும். ஏதேனும் அசம்பாவத்தால் நடன நிகழ்ச்சி தடைபடாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. இதற்காக லிலி என்ற பெண் தேர்வு செய்யப்பட்டு நினாவுக்கு கொடுக்கப்படும் எல்லா பயிற்சிகளும் அவளுக்கும் கொடுக்கப்படுகிறது.
நடன நிகழ்ச்சி நெருங்க நெருங்க நினா புதிரான சில விஷயங்களை அனுபவப்படுகிறாள். முக்கியமாக அவளது தோள்பட்டையில் ரத்தக் காயங்கள் தோன்றுகின்றன, கால் நகங்கள் உடைந்து போகின்றன. மேலும், லிலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருக்க சதி செய்வதாகவும் நினாவுக்கு தோன்றுகிறது. காயமும் அதிகரித்து வருகிறது. சின்னச் சின்ன கறுப்பு சிறகுகள் தோளில் முளைப்பதை பார்த்து நினா பீதியடைகிறாள்.
நிகழ்ச்சி நடக்கும் அன்று தாயின் எதிர்ப்பை மீறி அரங்குக்கு நினா செல்கிறாள். அங்கு லிலி பூரண மேக்கப்புடன் இருப்பதை பார்ப்பவள், அவசரமாக உடை மாற்றி நடனத்துக்கு தயாராகிறாள். வெள்ளை அன்னமாக நினாவின் நடனம் அற்புதமாக இருக்கிறது. என்றாலும் ஒருமுறை அவளது கால் தவறிவிடுகிறது. அடுத்து கறுப்பு அன்னமாக மாற வேண்டும். மேக்கப் அறைக்கு வரும் நினா அங்கு கறுப்பு அன்னம் மேக்கப்பில் லிலி இருப்பதைப் பார்த்து ஆத்திரத்தில் அவளை பாட்டிலால் வயிற்றில் குத்தி சாகடிக்கிறாள். பிணத்தை அருகிலுள்ள அறையில் மறைத்து வைக்கிறாள். இப்போது அவளது தோள்பட்டையில் ஏதோ மாற்றம் நிகழ்கிறது. முழுமையான பெரிய கறுப்பு சிறகுகள் தோளில் முளைக்கின்றன. நினா பூரணமாக கறுப்பு அன்னமாக மாறி மேடையில் ஆக்ரோஷமாக ஆடுகிறாள். பார்வையாளர்கள் மெய் மறந்து போகிறார்கள்.