ஷங்கரின் ஐ படத்தின் பூஜையுடன் அரை டஜன் படங்கள் அவசர அவசரமாக பூஜை போட்டு படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டன. ஆடி மாசத்தால் வந்த அவசரம். ஐ படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிப்பதும் எமி ஜாக்ஸன் ஹீரோயின் என்பதும் தெரிந்த விஷயங்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு. இந்தமுறை முழுமையாக வெளிநாட்டு திறமைகளுடன் ஷங்கர் களமிறங்கியிருக்கிறார். காஸ்ட்யூம்கூட வெளி ஆள்தான்.
எம்ஐபி 3 படத்தின் காஸ்ட்யூம் டிஸைனர் Mary Vogt ஷங்கரின் ஐ படத்தின் காஸ்ட்யூம் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அதேபோல் சண்டைப் பயிற்சி. அனல் அரசுடன் சைனாவின் பீட்டர் மிங்கும் இணைந்து பணிபுரிகிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான். வாலி, வைரமுத்து போன்ற சீனியர்களை தவிர்த்து கபிலனை முழுமையாக பயன்படுத்துகிறார் ஷங்கர். ஏற்கனவே ஒரு பாடல் ஒலிப்பதிவாகிவிட்டது.
காமெடிக்கு சந்தானம், ஆக்சனுக்கு சுரேஷ் கோபி என்று மேலும் சிலரை சேர்த்திருக்கிறார்கள். படத்தின் சிஜி வொர்க்கை ஆஸ்திரேலியன் ரைஸிங் சன் பிக்சர்ஸ் கவனிக்கிறது. இவர்கள்தான் ஹாரிபாட்டர் சீரிஸில் நம்மை மிரட்டியவர்கள்.
ஒரு மெகா டீமுடன் இந்த மாதம் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஷங்கர். முக்கியமான விஷயம் இது அரசியல் படமோ பலரும் சொன்ன மாதிரி தேர்தல் கதையோ இல்லை. சுபாவின் சொந்த உருவாக்கமாம்.