நான் ஈ - திரையுலகத்தின் மணி மகுடம்!


அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நாயகி சமந்தா அண்ணியுடன் வசித்து வருகிறார். சமூக சேவை நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு அண்ணியும் உறுதுணையாக இருந்து வருகிறார். இவருக்கு எதிர் வீட்டில் குடியிருப்பவர் நானி. இவரும் சமந்தாவும் ஒருவருக்கொருவர் காதலைச் சொல்லாமலேயே காதலித்து வருகின்றனர். 

இந்நிலையில், சமந்தா தான் நடத்தி வரும் சமூக சேவை நிறுவனத்திற்கு நன்கொடை பெறும் பொருட்டு, தொழிலதிபர் சுதீப்பை சந்திக்கச் செல்கிறார். முதல் சந்திப்பிலேயே சமந்தாவை பிடித்துப்போக அவரை எப்படியாவது அடைய நினைக்கிறார் சுதீப். இதனால் சமந்தா நடத்தி வரும் சமூக சேவை நிறுவனத்திற்கு ரூ. 15 லட்சம் நன்கொடை அளிக்கிறார். 


அதன்பின், சமந்தாவிடம் அடிக்கடி சந்திப்புகளை ஏற்படுத்தி தன்பக்கம் இழுக்க நினைக்கிறார். இதில் துளியும் ஆர்வமில்லாத சமந்தா அவரை விலக்கிவிட நினைக்கிறார். 


இந்நிலையில் சமந்தா நானியை காதலிப்பது சுதீப்புக்கு தெரியவர, நானியை தீர்த்துக் கட்ட நினைக்கிறார். அதன்படி நானியை அடியாட்கள் வைத்து கொலையும் செய்து விடுகிறார். 


கொலை செய்யப்பட்டதும் நானியின் ஆவி ஒரு ஈயின் கருப்பையில் புகுந்து கொள்கிறது. அதன்பின் ஈயாக மறு ஜென்மம் எடுக்கிறார் நானி. பல அச்சுறுத்தல்களை தாண்டி சுதீப்பின் மேல் சென்று அமரும் ஈ-க்கு அப்பொழுதுதான், முன் ஜென்மத்தில் நாம் என்னவாக இருந்தோம் என தெரியவருகிறது. அதன்பிறகு சமந்தாவிடம் தான் யார் என்பதை புரிய வைத்து, வில்லனை பழிவாங்க சமந்தாவுடன் சேர்ந்து களத்தில் குதிக்கிறது ஈ. முடிவில் வில்லன் பழிவாங்கப்பட்டாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. 


படத்தின் முதல் ஹீரோ கிராபிக்ஸ் வேலைகள்தான். கிராபிக்ஸ் காட்சிகளில் நெருடல் இல்லாமல் ரசிக்கும்படி செய்திருப்பது அசத்தல் ரகம். அதுவும் அந்த ‘ஈ’ டிசைன் அட்டகாசம். சைகை காண்பிப்பது, பாவனை செய்வது என ஒவ்வொன்றும் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. 


இரண்டாவது ஹீரோ வில்லன் சுதீப். படம் முழுவதும் இவரது ராஜ்யம்தான். இப்படத்தில் இவருக்கு ஒரு கலக்கலான கதாபாத்திரம். அதை திறம்பட செய்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டலாம். 


அதன்பிறகு நாயகன் நானி. படத்தின் பெயருக்கும் பொருத்தமான கதாநாயகனாக தேடியிருப்பார்கள் போல.  கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படம் தொடங்கி அரை மணி நேரத்திற்குள்ளாகவே இறந்துவிடுவதால் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவே. இருந்தாலும் படத்தில் வரும் வரை தனது கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். 


நாயகி சமந்தா செம அழகு. கண்ணியமான உடைகளில் சமூக சேவகியாக நம்மைக் கவர்கிறார். சந்தானம் சில காட்சிகளில் வந்தாலும் கலகலப்பூட்ட வைக்கிறார். 


படத்திற்கு இன்னொரு பிளஸ் பாய்ண்ட் கிரேசி மோகனின் வசனங்கள்.  குறிப்பாக சமந்தா, அழுதா வருத்தம் குறைஞ்சிடும்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு அழ அழ அது அதிகமாகுது என்பது போன்ற வசனங்கள் கல் நெஞ்சையும் கரைய வைக்கும் ரகம். அவருடைய கலட்டாவான வசனங்களும் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. 


கற்பனைக்கு எட்டாத கதைக் களத்தை, தைரியமாக கையிலெடுத்து, அதை நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குனர் ராஜமௌலிக்கு பலத்த கைத்தட்டல்களை கொடுக்கலாம். இதுவரை நாய், யானை, குரங்கு என பலவிதமான விலங்குகள் தமிழ் சினிமாவில் நடித்திருந்தாலும், ஒரு ஈ-யின் முகபாவனைகள் எப்படியிருக்கும் என சிந்தித்து, அதை திரையில் கொண்டுவந்த அவரது வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள். 


மரகதமணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக பின்னணி இசையில் நம்மை மிரள வைக்கிறார். செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் பாடல்களில் குளுமையும், காட்சிகளில் பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது. 


மொத்தத்தில் ‘நான் ஈ’ நீண்ட தூரம் பறக்கும்....
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget