பொதுவாக நம்மூர் சினிமாக்களில் வெளிமாநில, வெளிநாட்டு ஹீரோயின்கள் தான் அதிகளவு இறக்குமதியாவர். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. ஹீரோயின்கள் மட்டுமல்லாது, வில்லன்களை கூட வெளிமாநிலத்தவரையும், வெளிநாட்டவரையும் நடிக்க வைக்க ஆரம்பித்துள்ளனர். பேராண்மை படத்தில் எஸ்.பி.ஜனநாதன், ரொணால்டு கிக்கிங்கரையும், 7ம் அறிவு படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஜானி டிரய் நுகுயென்னையும் நடிக்க வைத்தனர். அந்தவரிசையில் இப்போது
இன்னும் ஒரு ஹாலிவுட் நடிகரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அது கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில், ஜெயம் ரவி - த்ரிஷா நடிக்க இருக்கும் பூலோகம் படத்தில் தான்.
பூலோகம் படத்தில் ஜெயம் ரவி பாக்ஸராக நடிக்கிறார். அதனால் இப்படத்தில் டபிள்யூ.டபிள்யூ.இ., ஸ்டார்களான ஜான் சீனா அல்லது ஸ்டோன் கோல்டு ஸ்டீவ் ஆஸ்டின் ஆகிய இருவரை நடிக்க கல்யாண் கிருஷ்ணா முயற்சி செய்து வருகிறார். இரண்டு ஸ்டார்களுக்கும் உலகம் முழுக்க, அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் இருவரில் ஒருவரை நடிக்க முயற்சி செய்து வருகிறார். விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.