சினிமா, விளம்பரம், சின்னத்திரை என அழகு ஆன்ட்டியாக வலம் வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் ‘ஆரோகணம்' படத்தின் மூலம் இயக்குநர் அவதாராம் எடுத்திருக்கிறார். மூன்று பெண் குழந்தைகளுக்கு அம்மாவான இந்த சினிமா அம்மாவின் திரை உலக பயணம் 2006 ம் ஆண்டு தொடங்கியது. தற்போது மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்கிறது. முதன் முறையாக விஜய் டிவியின் அவள் சீரியலில் லட்சுமி ராமகிருஷ்ணன் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
யுத்தம் செய் படத்தில் மொட்டைத் தலையுடன் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தார். நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்தார். பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யாவுக்கு அம்மாவானார். நாடோடிகள், ரௌத்திரம் என பல படங்களிலும், அன்பான, நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்கள் மட்டுமே செய்து லட்சுமி ராமகிருஷ்ணன் முதன் முறையாக ஆணவமான, திமிர்தனம் கலந்த கதாபாத்திரம் செய்து வருகிறார். தன்னுடைய இந்த புதுமையான அனுபவம் பற்றி அவர் சொல்வதைப் படியுங்களேன்.
சினிமாவில் நடிப்பதை விட வித்தியாசமாக இருந்தால் மட்டுமே சீரியலில் நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அவள் சீரியலின் கதை கேட்கும் போதே எனக்குப் பிடித்திருந்தது. இது போல்டான, சேலஞ்சிங்கான கதாபாத்திரம்.
இது சினிமாவில் நான் பண்ணாத கதாபாத்திரம். சினிமாவில் ஹீரோவுக்கு அம்மா கதாபாத்திரம்தான். அன்பான அந்த அம்மாவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் அவள் தொடரில் ஆணவமான, எதிலுமே தான்தான் உயர்ந்தவள் என்று நினைக்கும் கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது.
சீரியலில் இப்படி ஒரு கதாபாத்திரம் செய்வது புதுமையான அனுபவமாக இருக்கிறது. ரொம்ப அனுபவித்து நடிக்கிறேன் என்று கூறிவிட்டு சூட்டிற்கு கிளம்பத் தயாரானார் லட்சுமி ராமகிருஷ்ணன்.