தி அன்நோன் விமன் ஹாலிவுட் விமர்சனம்


நல்ல சினிமாவாக இருக்கும்னு நம்பி டிவிடி வாங்கினால் பல நேரம் கூழாக நம்மை அரைச்சு மொட்டை மாடியில் வடாகமாக காயப்போட்டுவிடும். சில படங்களை பாஸ்ட் பார்வர்ட் பண்ணினால்தான் ஓடவே செய்யும். அப்போதும் ஸ்லோமோஷன் மாதிரி நகர்கிற படங்களும் உண்டு. குசாபே டொர்னாடோர் படங்களென்றால் இந்த வன்முறையெல்லாம் இருக்காது நம்பி வாங்கலாம், பார்க்கலாம்.

தி அன்நோவன் விமன் 2006ல் குசாபே இயக்கிய படம். முதல் காட்சியே காந்தாரி மிளகை கடித்த மாதிரி தலைக்குப் பிடிக்கிறது போலவே இருக்கும் இவரது படங்களில். இந்தப் படமும் அப்படியே காந்தாரி எபெக்ட். உக்ரைன் இளம் பெண்ணொருத்தி - இளம் பெண்ணுக்கும் பேரிளம் பெண்ணுக்கும் நடுவாங்கமாக என்பதுதான் சரி - இத்தாலிக்கு பயணம் செய்கிறாள். நடுநடுவே பேன்டேஜ் டைப் உடலுறவு வன்முறை காட்சிகள் வந்து போகின்றன. ஓகே இப்போது நமது கற்பனைக்கு லீட் கிடைத்துவிட்டது. இந்தப் பெண் யார்? எதற்காக எங்கு பயணம் செய்கிறாள்? தன்னை வன்முறையாக புணர்ந்தவர்களை தேடியா, அவர்களை பழி வாங்கவா? இல்லை தனது அந்த மாதிரி படங்களை கைப்பற்றவா? 8எம்எம் டைப் படங்களை பார்த்தவர்களுக்கு கற்பனை இந்த திசையில்தான் ஓடும்.

இத்தாலியில் அப்பெண் - பெயர் ஐரினா - வேலைக்கு முயற்சிக்கிறாள். அதுவும் குறிப்பிட்ட ஒரு அபார்ட்மெண்டில், குறிப்பிட்ட ஒரு குடும்பத்திடம். நாமிருவர் நமக்கொரு பெண் குழந்தை என்று இந்திய குடும்பக்கட்டுபாட்டை ஸ்ட்ரிக்டாக பாலோ செய்யும் குடும்பம் அது. அவர்களுக்கு ஜினா என்ற வயதான வேலைக்காரி ஏற்கனவே இருக்கிறாள். அதனால் ஐரினாவால் அவர்களை நெருங்க முடிவதில்லை. இந்நிலையில் ஜினா படிக்கட்டில் தவறி விழுந்து மோசமாக அடிபடுகிறாள். விபத்துக்கு காரணம் ஐரினா என்று சொல்ல வேண்டியதில்லையே. 

ஒருவழியாக அந்தக் குடும்பத்திற்குள் நுழையும் ஐரினா அந்த பெண் குழந்தையின் - இந்த குழந்தைக்கு அடிபாடாத மாதிரி விழத் தெரியாது. அடிக்கடி விழுந்து காயம்படுவது வாடிக்கை. அதனை மாற்ற ஒருபக்கம் ஐரினா கடுமையாக முயற்சித்துக் கொண்டே வீட்டின் ஸேப்டி லாக்கரை தேடி கண்டு பிடித்து சில டாக்குமெண்ட்களை கண்டடைகிறாள். சாpதான் இது திருட்டு இல்லை. நாம் முதலில் கற்பனை செய்த மாதிரி பழிவாங்குற ஹாலிவுட் டைப்பும் இல்லை.

நடுவில் ஐரினா தனது மொட்டைத் தலை பிம்பை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்ததை பிளாஷ்பேக்கில் பார்க்கிறோம். திடீரென அந்த பிம்ப் உயிரோடு வந்து கத்திரிக்கோலுக்கெல்லாம் சாகிறவனா என்று சத்திரியத்தனமாக உறுமுகிறான். அதன் பிறகு....

நாம் எதிர்பார்த்த, பார்க்காத பல விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் அதுவல்ல முக்கியம். ஐரினா எதற்காக அந்த குறிப்பிட்ட வீட்டைத்தேடி வந்தாள் என்பது. கதையோட்டத்தில் இதை கண்டு பிடிக்க குசாபே போனால் போகிறது என்று சில வசனங்களை வைத்திருக்கிறார். கண்டு பிடிக்க முடிந்தால் படம் கொஞ்சம் போரடிக்கும். சே.. இதுக்குதானா இந்த பில்டப்?

ஐரினாவாக நடித்த - தமிழில் எழுதினால் கண்டிப்பாக பல் சுளுக்கும் அதனால் ஆங்கிலத்தில்.. Ksenia Rappoport ரஷ்யாவைச் சேர்ந்த நாடக நடிகையாம். இவரின் முகம்தான் படத்தின் பெரிய ப்ளஸ். இவர் லேசாக கண்கலங்கினாலே சோக சேற்றில் சமாதியாகிவிடுகிறோம். நல்லவேளை அதிகமாக கண்கலங்க விடவில்லை. அந்த பெண் குழந்தை க்யூட். 

ஷார்ப்பான எடிட்டிங், இந்தப் பக்கம் கேமராவை வைத்திருக்கலாமே என்றெல்லாம் யோசிக்க வைக்காத ஒளிப்பதிவு, கேமரா கோணங்கள். இசை எக்ஸலெண்ட். எனியோ மோரிகோன். ஆலிவர் ஸ்டோனின் யு டர்ன், லோலிட்டா, குசாபே வின் மெலினா படங்களுக்கெல்லாம் இசையமைத்த அதே மாஸ்டர். எடிட்டிங்கும், இசையும் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் படம் காலி.

குசாபே வின் சினிமா பேரடைஸோ, மெலினா படங்களைப் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருக்கும். திரைமொழியில் இருக்கும் ஆளுமையை வைத்து குசாபே ஒரு சின்ன விஷயத்தை எவ்வளவு அற்புதமாக எடுத்திருக்கிறார் என்று படம் பார்த்த பிறகு தோன்றியது. ஒரு சின்ன விஷயத்தை திரைமொழியில் இருக்கும் ஆளுமையை வைத்து எப்படி சமாளிக்கிறாங்க என்றும் தோன்றியது. இரண்டாவதுதான் அடிக்கடி நிழலாடுகிறது.

குசாபே என்ற மாஸ்டரின் படம். ஆனால் மாஸ்டர் பீஸெல்லாம் இல்லை. 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget