அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பிரபல டிவிகளுக்கு மத்தியில் புதிதாய்ப் பிறக்கப் போகும் வேந்தர் டிவி வித்தியாசமா ஒரு நிகழ்ச்சியை களம் இறக்கவுள்ளது. அழுவாச்சி தொடர்கள், கள்ளக்காதல் தொடர்கள், கண்டக்க முண்டக்க வசனங்கள் நிறைந்த தொடர்கள் என்று தொடர்ந்து சளைக்காமல், சற்றும் சலிக்காமல் கொன்று குவித்து வரும் டிவிகளுக்கு மத்தியில் புதிதாய் பிறக்கப்போகும் வேந்தர் டிவி ஒரு வித்தியாசமான தொடருடன் களம் இறங்குகிறது.
முடிவல்ல ஆரம்பம் என்று இதற்குப் பெயரிட்டுள்ளனர். அதாவது ஒரு திரைப்படத்தின் முடிவில் சில காட்சிகளைப் பார்க்கும்போது, இதை வைத்தே ஒரு புதுப் படம் எடுக்கலாம் போலிருக்கே என்று நினைப்போம். அப்படிப்பட்ட படங்களை வைத்து அதன் தொடர்ச்சியாக இந்த சீரியலை உருவாக்குகின்றனராம். அதாவது ஒரு படத்தின் இறுதியில் வரும் காட்சிகளை கருவாக வைத்து இந்தத் தொடரின் எபிசோடுகள் இருக்குமாம்.
கிட்டத்தட்ட அப்படத்தின் 2ம் பாகம் போலத்தான் இதுவும். இருப்பினும் இதை சின்னத்திரையில் வித்தியாசமான முறையில் விறுவிறுப்பாக கொடுக்கப் போகிறார்கள். இதை இயக்கப் போவது சினிமா இயக்குநர் ரங்கராஜ். இவர் உதயகீதம், கீதாஞ்சலி, உயிரே உனக்காக போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த சில்வர் ஜூப்ளி இயக்குநர்.
இந்தத் தொடரின் நாயகனாக மெட்டி ஒலி மூலம் புகழ் பெற்ற போஸ் வெங்கட் நடிக்கவுள்ளார். மெட்டி ஒலிக்குப் பிறகு சினிமாவுக்குப் போனவர். அங்கிருந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார்.
இந்தத் தொடருக்காக சில திரைப்படங்களை யோசித்து வைத்துள்ளனராம். அவை எது என்பதை இதுவரை ரங்கராஜ் தெரிவிக்கவில்லை.
புதிய தலைமுறை செய்தி சேனல் குழுமத்திலிருந்து பிறக்கும் சேனல்தான் இந்த வேந்தர் டிவி. சன் நியூஸுக்குக் கடும் போட்டியைக் கொடுத்து வரும் புதிய தலைமுறையைப் போல இப்போது சன் டிவிக்கு கிடுக்கிப் பிடி போடுவதற்காக வேந்தரை களம் இறக்குகிறார்களாம்.