அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்றும், அவருக்கேற்ற கதையை ராஜமவுலி தயார் செய்துவிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் 3டி படம் கோச்சடையான் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. அடுத்து ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. சிலர் கேவி ஆனந்த் படம் என்கிறார்கள். இன்னும் சிலர் கேஎஸ் ரவிக்குமார் என்கிறார்கள்.
இந்த லிஸ்டில் இப்போது பரபரப்பாக அடிபடுவது ராஜமவுலி பெயர்தான்.
ராஜமவுலி இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவது உறுதிதான் என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள். ராஜமவுலி இயக்கிய ‘நான் ஈ' படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றிகரமாக ஓடி கோடிக்கணக்கில் வசூலை குவித்தது.
இந்தப் படம் பார்த்ததுமே இந்திய சினிமாவில் முக்கிய படமாக நான் ஈ வரும் என்று ரஜினி பாராட்டியிருந்தார்.
ராஜமவுலியும் ரஜினியை இயக்க எப்போதும் தயார் என்று கூறியிருந்தார்.
இப்போது ரஜினிக்கேற்ற கதையொன்றை ராஜமவுலி தயார் செய்து ரஜினியிடம் கூற, அவருக்கும் கதை பிடித்துப் போனதாம்.
தமிழ் - தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை இந்தியிலும் டப் செய்யத் திட்டமாம்.