24 தயாரிப்பாளர்களின கூட்டு முயற்சி(!)யில், ராஜ்பா ரவிசங்கர் இயக்கியிருக்கும் படம் அஜந்தா. 80களில் மோகன் நடித்த கதைகளைக் கோர்த்த காதல் மாலை. இசைஞானியின் பாடல்கள் நம்மை அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன. “எங்கே இருந்தாய் இசையே...’ ஜேசுதாஸ் மற்றும் மஞ்சரி குரல்களில் நம்மைத் தாலாட்டுகிறது. “யாருக்கு யார் என்று பிரம்மாதேவனே...’ உன்னிகிருஷ்ணனின் மயக்கும் குரலில் அட்டகாசமான மெலடி. “கையில் ஒரு கீ போர்டும்..’ திப்பு குரலில் அசத்தல் பாட்டு.
“அஜந்தா’வுக்கு இளையராஜா போட்டுக் கொடுத்தது 36 ’பாடல்கள். அத்தனையும் படமாக்கியிருந்தால், படம் மூணு காட்சி போட முடியாது. ஒரே காட்சிதான்.
ஆனந்த் (ரமணா) இசைக் கலைஞன். வாய்ப்புக்காக அலைபவன். கிராமத்து திருவிழாவில் அவன் அஜந்தாவை (வந்தனா குப்தா) சந்திக்கிறான். பார்வையற்ற அவள், ஒரு பாடும் குயில். அதரவற்ற அவளை சென்னைக்கு அழைத்து வந்து, அவளுக்கு பார்வை கிடைக்கச் செய்கிறான். ஆனால் அவளது பார்வை திரும்பும் போது, அவன் விமான விபத்தில் இறந்து போகிறான். பார்வையை மீட்டுத் தந்த டாக்டரையே அவள் மணக்க இருக்கும்போது, மீண்டும் ஆனந்த் வருவதும், காதலர்கள் ஒன்று சேர்வதுமான நைந்து போன கதை.
பெரிய திருப்பங்கள் இல்லாத படம்! காப்பாற்றுவது இசைஞானியின் இசை மட்டும்தான். ரமணா “புதுப்புது அர்த்தங்கள்’ ரகுமான் போல இருக்கிறார். நடிப்பும் ஓகே! வந்தனா இந்தி ஊர்மிளாவின் நகல். இளவரசுவின் ஒளிப்பதிவு வெகு சுமார். “எல்லோரும் பிள்ளையை தத்தெடுப்பாங்க. ஆனா, இவன் ஒரு தாயை தத்தெடுத்தான்!’ அவ்வப்போது மின்னும் “பளிச்’ வசனங்கள் படத்திற்கு ஆறுதல்! என்றாலும்... 140 நிமிட படத்தைக் காப்பாற்றுவது இசையும், ரமணாவின் நடிப்பும் மட்டுமே!
மொத்தத்தில் , அஜந்தா" - "சிதைந்த சிற்பம்"