குடும்ப சூழல் மாறி விட்டதால் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விட்டேன், என்று நடிகை பானு உற்சாகத்துடன் கூறியுள்ளார். தாமிரபரணி படத்தில் விஷால் ஜோடியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பானு. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த பானு, அடுத்தடுத்த படங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கவரவில்லை. சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அவர், இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
இதுபற்றி பானு அளித்துள்ள பேட்டியில், எனது முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அதன் பிறகு நான் தேர்வு செய்த வேடங்கள் தவறானவையாக அமைந்துவிட்டது. எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் எங்கள் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. எனது தந்தையுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால், சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தேன். இப்போது அந்த சூழல் மாறிவிட்டது. புதிய வேகத்தில் எனது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி இருக்கிறேன். வசந்த் இயக்கும் ‘மூன்றுபேர் மூன்று காதல் படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது. 3 பக்கம் எழுதிய வசனத்தை என்னிடம் கொடுத்து மனப்பாடம் செய்யச் சொன்னார். அதற்கான நேரமும் கொடுத்தார். பின்னர் அழைத்து அந்த வசனத்தை நாகர்கோவில் வழக்கில் பேசி தகுந்த பாவனைகளுடன் நடித்து காட்டச் சொன்னார். அதன்படி செய்தேன். பிறகுதான் என்னை தேர்வு செய்தார். மீனவ பெண்ணாக இதில் நடிக்கிறேன். இதற்காக ஒரு மாதம் நாகர்கோவில் கடற்கரையில் வெயிலில் நின்றபடி எனது தோல் நிறத்தை கருப்பாக்கச் சொன்னார். இனி பொருத்தமான வேடங்களை தேர்வு செய்வேன். இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப பயிற்சி செய்து எனது தோற்றத்தையும் மற்ற நடிகைகளுடன் போட்டிபோடும் அளவுக்கு மாற்றி இருக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.