அகிலன் சினிமா விமர்சனம்


தமிழ் சினிமா ஊறவைத்து அடியென அடித்துத் துவைத்துவிட்ட, இன்னும் துவைத்துக் காய போடவிருக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட கதைதான். ஆனால் சொன்ன விதத்தில் ரொம்பவே வித்தியாசம் காட்டி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் அகிலன் படத்தின் இயக்குநர் ஹென்றி ஜோசப். மதுரை ஏரியாவில் அடிக்கடி பெண்கள் காணாமல் போய்விடுகின்றனர். அவர்களைக் கடத்திக் கொண்டு போய் மிரட்டி பணம் சம்பாதிக்கிறது ஒரு கும்பல். அவர்களை பிடிக்க பெரும் முயற்சி எடுக்கிறது காவல்துறை.
காவல்துறைக்கு அல்வா கொடுக்கும் அந்த கும்பலை எப்படி களையெடுக்கிறார்கள் என்பது க்ளைமேக்ஸ்.

பெண்கள் அடிக்கடி காணாமல் போகும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ற கதைதான். படத்தின் முதல் பாதி ஜெட் வேகத்தில் நகருகிறது. இடைவேளைக்கு பிறகு கல்யாண மண்டபத்திலேயே நகரும் காட்சிகள் தொடர்வதால் கொஞ்சம் சலிப்பு ஏற்பட்டாலும் அந்த வேளையில் காமெடியையும் புகுத்தி சலிப்பில்லாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

டாக்டர் சரவணன் என்பவர்தான் ஹீரோவாக நடித்து படத்தையும் தயாரித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர்களே ஹீரோக்களாக நடிக்கும் போது, படம் முழுக்க அவர்களை காட்டியும் அவர்களின் அருமை பெருமையைக் காட்டி, அதோடு விட்டாலும் பரவாயில்லை சண்டை காட்சிகளில் ஒரே அடியில் நூறு பேரு பறக்கிற மாதிரி எல்லாம் காட்சிகளை வைத்து படத்தைப் பார்க்கிற ரசிகர்களுக்கு ரெண்டு நாளைக்கு வேறு வேலை பார்க்க முடியாதபடி தலைவலியை வரவழைத்துவிடுவார்கள்.

ஆனால் அகிலன் படத்தில் அப்படி எந்த காட்சியுமே இல்லை. சாதாரண போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வருகிறார் அகிலன். பஞ்ச் வசனங்கள் ஏதும் இவர் பேசவேயில்லை. நண்பர் மதுரை முத்துவிடம் ‘எல்லாருக்குமே ஒரு வாய்ப்பு வரும் அதுவரைக்கும் காத்திருக்கணும்…’ என்று வசனம் பேசுகிற இடத்திலும் சரி, மேலதிகாரி தனது மனைவியை காரில் அழைத்துக் கொண்டு வீட்டில் கொண்டு விடுமாறு சொல்லுகிற காட்சியில் சலிப்பில்லாமல் அந்த வேலையை செய்வது, அவர் வீட்டிற்கு வந்த போது அவரது குழந்தையிடம் ‘நாங்கல்லாம் ஏழைங்கம்மா…’ என்று பேசுகிற இடங்கள், ‘போலீசுக்கு தகவல் கொடுத்தா யாரு என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டியா…?’ என்று போலீஸ் அதிகாரி எகிறும் போது அந்த இடத்தில் தன் சக போலீஸ்காரரிடம் பதில் சொல்கிற போதும் ஹீரோ சரவணன் நம்மை ரொம்பவே ஈஸியாக இம்ப்ரஸ் செய்துவிடுகிறார்.

இந்த மூன்று காட்சிகளுமே போதும் ஹீரோவை அல்லது அந்த கேரக்டரை நமக்கு ரொம்பவே பிடித்துப் போவதற்கு. பெரும்பாலான காட்சிகளில் வசனம் மட்டுமே பேசி சமாளித்துவிடும் சரவணன் இன்னும் கொஞ்சம் நடிப்பை மேம்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வெறுமனே வந்தோமா நாலு பாட்டுக்கு ஆடினோமா என்று இருக்கிற அறிமுக நாயகிகளுக்கு மத்தியில் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஹீரோயினுக்கு கதையுடன் இணைந்து பயணிக்கிற வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

போலீஸ் அதிகாரியாக வருகிறார் ராஜ் கபூர். கொஞ்சம் அமைதியான அதிகாரியாக கேரக்டராக தெரியவேண்டும் என்பதால் மீசையை எடுத்துவிட்டார் போலிருக்கிறது. கஞ்சாகருப்பு, போண்டா மணி, கிங்காங், மனோபாலா, சிங்கம்புலி கூட்டணி காமெடிக் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். அதுவும் கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளை, பொண்ணு, அந்த காது கேளாதவர், சிங்கம்புலி காம்பினேசன் செம காமெடி ரகளை.

சின்னத் திரைகளில் மட்டுமே காமெடி கலாட்டா செய்து கொண்டிருக்கும் மதுரை முத்து இந்தப் படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக வருகிறார். இவரது காமெடியும் காமெடி டயலாக்கும் ரொம்பவே ரசிக்க வைக்கிறது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் மதுரை முத்து பெரிய திரையில் பிரகாசிக்கலாம்.

கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் பரவாயில்லை சொல்ல வைத்தாலும் பின்னணி இசையில் பல இடங்களில் பளிச்சிட வைத்திருக்கிறார்.

படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஹென்றி ஜோசப். முதல் பாதியின் படத்தை விறுவிறுப்பாக பயணிக்க வைத்தவர் இரண்டாவது பாதியில் கொஞ்சம் தடுமாறி சமாளித்திருக்கிறார். ஹீரோதானே படத்தை தயாரிக்கிறார் அதனால் அவரது புகழ் பாடுகிற மாதிரியான காட்சிகளை வைத்து கொடுமைப்படுத்தாமல் கதைக்கு என்ன தேவையோ அந்த காட்சிகளை மட்டும் வைத்திருக்கிறார். போலீஸ் கதையை வித்தியாசமாக சொன்னதற்காக ஹென்றி ஜோசப்புக்கு ஒரு சபாஷ் போடலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget