Transporter 3 சினிமா விமர்சனம்


எண்ணக் கருக்களுக்கு தட்டுப்பாடு இருந்தால் படத்தை எடுக்காமல் விட வேண்டியதுதானே, ஏன் இந்த பழஞ்சோறு வடிக்கிற வேலைக்கு போகவேண்டுமோ தெரியவில்லை. சிக்கென்று ஒரு ஹீரோ, வேகமாய் போகின்ற கார், மணமூட்டுவதற்கு புதிதாய் இறக்குமதி செய்யப்பட்ட கதாநாயகி இவ்வளவும் ஒரு படம் தயாரிப்பதற்கு போதும் என்று தீர்மானித்து படத்தை எடுத்திருக்கின்றார்கள். எனவே Transporter பட வரிசையின் இந்த மூன்றாம் பாகம், முதல் இரண்டு பாகங்களையும் அவ்வப்போது ஞாபமூட்டுவதை
தவிர்க்க முடியவில்லை.

ok, படத்தில் புதுமை என்பது இல்லவே இல்லை என்று சொல்வதற்கில்லை. படத்தின் மையக்கருவாக Frank’ஐயும், அவரது காரையும் இடையே உயிரிணைப்பை ஏற்படுத்தியிருப்பது நன்றாக இருக்கின்றது. முந்திரிக்கொட்டை போல அதைச் சொல்ல முதல், கதையோட்டம் என்னவென்று பார்ப்போம்: தனது பொருள் இடம்பெயர்க்கின்ற (Transporting) வேலையை இன்னொருவனிடம் கொடுத்துவிட்டு, பிரெஞ்சு காவல் அதிகாரியும், நண்பருமான Tarconi’யுடன் பொழுது போக்கிக் கொண்டிருக்கின்றார் Frank Martin (Jason Statham.) அமைதியாக சென்று கொண்டிருக்கும் இவரது வாழ்வில், இவரது பழைய வேலையை ஏற்றுக்கொண்டவன் வேலையின் இடையில் இவரது வீட்டிற்கு வந்து மண்டையைப் போடுகின்றான். ஏதும் புரியாமல் இவர் முழிக்க, ஒழுங்காக சிந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும் முன்னர் இவர் கடத்தப் படுகின்றார். இப்போது, இவரது பிரதிநிதியால் இடையில் விடப்பட்ட வேலையை முடிப்பதற்கு இவர் நிர்ப்பந்திக்கப் படுகின்றார். வழமைபோல பொதிகள் சிலவற்றை ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு கொண்டு செல்லவேண்டிய வேலை. இடையில் காரை விட்டுவிட்டு இவர் தலை மறைவாகி விடமுடியாமல், மணிக்கட்டிலே பொருத்தப்பட்ட ஒரு இலத்திரனியல் வெடிகுண்டு — காரைவிட்டு 50 அடி விலத்தி இவர் போனால் அது வெடிக்கும். இந்தக் குண்டு தவிர, இவருடன் பயணத்துணைக்கு ஒரு Britney Spears குணாதிசயத்துடன் ஒரு பெண் வேறு. இனி என்ன; பயணம் ஆரம்பம். இடையில் வழமைபோல அடிபாடு, கார்த்திரத்தல்கள், காதல் என்றுஎல்லாத்தையும் சேர்த்து, எதிரிகளை Frank முறியடிப்பது மிகுதிக் கதை.

படத்தில் பெரிய திருப்பமாக அமைய வேண்டியது, தான் கடத்தும் பொருள் என்ன என்பதை Frank அறிந்து கொள்வது; Frank’ற்கு வேண்டுமானால் அது ஆச்சரியமாக இருக்கலாம்; எங்களிற்கு அது ஆச்சரியமாகவில்லை. Jason Statham இன்னமும் கட்டுமஸ்தாக அழகாகத்தான் இருக்கின்றார். அடிபாட்டு காட்சிகளில் வழமைபோல எமது இரத்தோட்டத்தை கூட்டுகின்றார். என்றாலும் படத்தின் கதாநாயகி இவரிற்கு பொருத்தமாகத் தெரியவில்லை. மேலும், Transporter படமென்றால் விறுவிறுப்பான கார்த் திரத்தல்கள் இருக்கும்; இதிலும் உண்டு; என்றாலும் முன்னைய படங்கள்போல அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. அது, அதிகமாக கார் திரத்தல் படங்களை பார்த்த எனது பிழையோ தெரியாது!  Transporter படங்கள் காதில் பூச்சுத்துகின்ற வேலைக்கும் பிரபல்யம். முன்னைய படங்கள் அளவு இல்லையென்றாலும், இந்தப் படத்திலும் அவை உண்டு. ஆக்கிமிடிசின் தத்துவத்தை வாய்ப்புப் பார்க்கின்ற ஒரு காட்சி வரும். அதை மட்டும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றால் சரி.  பொதுவாக ஆக்ஸன் ரசிகர்கள் பார்க்கலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget