செவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில் சூரிய உதயத்தை அடிப்படையாக கொண்ட நேரம் நள்ளிரவு மணி 12.34க்கு 1.1.2013ஆம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி கற்பனை, காவிய கிரகமான
சுக்ரனின் ஆதிக்கத்தில் (2+0+1+3=6) இந்தாண்டு பிறப்பதால் மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.
எதிலும் பெண்களின் ஆதிக்கம் பெருகும். சுரங்கங்கள், காற்றாலைகள், இரும்புத் தொழிற்சாலைகள் பாதிப்படையும். மின்சார தட்டுபாடு மே மாதம் வரை தொடரும். காலம் தவறி மழைப் பொழியும். புயல், வெள்ளப் பெருக்கால் விளை நிலங்களும் சேதமடையும். மக்களிடையே ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். போட்டி, பொறாமை குணங்கள் மேலோங்கும். பாலியல் சம்பந்தமான புதிய நோய்கள் உண்டாகும். இதய, புற்று நோய் தொடர்பான அறுவை சிகிச்சைகளுக்கான நவீன கருவிகள் கண்டறியப்படும்.
தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் இருக்கும். சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயரும். அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் கண்டறியப்படும். மனவளம் குன்றிய, மாறுபட்ட முக அமைப்பு மற்றும் தோல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு அதிகரிக்கும். பால் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். விலையும் உயரும். வங்கிகளில் வாராக் கடனை வசூலிக்க கடுமையான சட்டங்கள் வரும். சில வங்கிகள் தனது கிளைகளை குறைத்துக் கொள்ள வேண்டி வரும்.
இந்தியாவின் ராசிக்கு சுகஸ்தானத்தில் இந்த ஆண்டு முழுக்க சனியும், ராகுவும் தொடர்வதால் அரசு நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும். அன்னிய நாட்டு நிறுவனங்களின் படையெடுப்பால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும். இந்திய வர்த்தகர்களும் பெரிதும் பாதிப்படைவார்கள். மீண்டும் ஒரு சுதந்திரத்திற்காக போராட வேண்டிய நிலை உருவாகும். அரசியல்வாதிகளின் சுயநலம் அதிகரிக்கும். உழைப்பாளி கிரகம் சனியுடன், ஏமாற்று கிரகம் ராகு சேர்ந்து காணப்படுவதால் நடுத்தர, முதிய வயது ஊழியர்கள் வேலையை இழப்பார்கள். இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் பெருகும். ஒருபக்கம் வேலை வாய்ப்பு பெருகினாலும் மற்றொரு பக்கம் கட்டாய ஓய்வால் பலர் வேலையையிழப்பர்.
எண் ஜோதிடப்படி இந்த ஆண்டின் (1+1+2+0+1+3) விதி எண்ணாக ஊழ்வினை கிரகமான சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 வருவதால் உலகெங்கும் உயிர் சேதங்கள் அதிகரிக்கும். சக்தி வாய்ந்த மருந்துகளையும் சமாளித்து நோய்களை பரப்பக்கூடிய வலிமையான பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் உருவாகும். உணவுக் கலப்படம் அதிகரிக்கும். நோயில்லாத ஆரோக்கியமான மனிதர்களை காண்பது அரிதாகும். அதேப்போல் வாய் சுத்தம், கை சுத்தமானவர்களையும் சந்திப்பது கடினமாகும். டாக்டர்கள், வக்கீல்கள் அதிகம் சம்பாதிப்பார்கள். கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை விழும்.
மனயிறுக்கத்தால் மக்கள் நிம்மதி இழப்பார்கள். அன்றாட பயன்பாட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துக் கொண்டே போகும். சுக்ரன் வீட்டில் சனி நிற்பதால் சினிமாத்துறையில் சின்ன பட்ஜெட் படங்கள் அதிகமாக வெளியாகும். பழைய படங்கள் மீண்டும் ஹிட்டாகும். அறிமுகக் கலைஞர்கள் அதிகம் சம்பாதிப்பார்கள். மணல், கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிக்கும். வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து மணல் இறக்குமதியாகும். தீவிரவாதிகள் நவீன தாக்குதல் நடத்துவார்கள். ஓட்டுநர்களை நெறிப்படுத்த புது விதிகள் பிறப்பிக்கப்படும். 4, 6, 8ஆம் எண்கள் வலிமையடையும்.
பூமிக்காரகன் செவ்வாயின் வீடான மேஷத்தில் கேது நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் இயற்கை சீற்றத்தால் பூமி அளவு குறையும். நிலத்தடி நீரில் உவர்ப்புத் தன்மை அதிகரிக்கும். பூமியில் அதிசயப் பள்ளங்கள் உருவாகும். எரி நட்சத்திரங்கள் விழும். செவ்வாய், சந்திரன், சனி, சுக்ரன் ஆகிய கோள்கள் காந்தப் புயல், புழுதி புயலால் பாதிக்கும். பெண்கள் பூப்பெய்துவதில் மற்றும் மாதவிலக்கு குறைபாடுகள் அதிகரிக்கும். செயற்கை கருத்தரிப்பை அதிகமானவர்கள் நாடுவார்கள். ரியல் எஸ்டேட் பாதிப்படையும். அமைச்சர்களைக்காட்டிலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கை ஓங்கும். இராணுவ ரகசியங்கள் கசியும். பொறுப்புமிக்க பதவி வகிப்பவர்கள் சுய நலம், இன நலம் பார்த்து ஒருபட்சமாக செயல்படுவார்கள். நீதித் துறையிலும் சலசலப்புகள் வரும்.
பரிகாரம்:
நீதி கிரகம் சனியின் ஆதிக்கத்தில் இந்தாண்டு பிறப்பதால் முடிந்த வரை சொல்லிலும், செயலிலும் நேர்மையைப் பின்பற்றுவோம். நெல் விதைத்தால் கரும்பு முளைக்காது என்பதை உணர்ந்து பிறர்க்கு நல்லது செய்து நாமும் நன்மைப் பெறுவோம்.