ஆங்கில படங்களில் ஆக்ஸன் படங்கள் என்று ஒரு வகை, ‘gore’ என்று அழைக்கப்படும் இரத்தம் சிந்துகின்ற, அங்க அவயவங்கள் பறப்பதாக இன்னொரு வகை. இந்தப் படம் இரண்டு வகையிலும் சேர்ந்து நிற்கின்றது. படம் அநியாயத்தைத் தட்டிக்கேட்பதற்காக ஆயுதம் எடுக்கும் ஒருவரைப் பற்றியது. Frank Castle (Ray Stevenson) ஒரு விசேட இராணுவ படைத்துறையில் பயிற்றுவிப்பனராக இருந்தவர். மனைவி, பிள்ளையோடு பொதுவிட பூங்காவொன்றிலே விளையாடிக் கொண்டிருக்கும் தருணத்தில், இரு திருடர் கூட்டங்களிடையே எழும் துப்பாக்கிச் சண்டையில்
துரதிஸ்டவசமாக மனைவியையும், பிள்ளையையும் காவு கொடுக்கின்றார். மிகுந்த கோபத்திற்குள்ளாகும் Frank, ஊரில் இருக்கும் திருட்டுக் கூட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக களையெடுக்கும் “punisher” (தண்டிப்பாளன்) ஆக உருவெடுக்கின்றார். களையெடுப்பது என்றால், காவல்துறையினரிடம் அகப்படுத்துவது இல்லை — இரவோடு இரவாக ஆட்களைத் “தூக்குவதுதான்.” இது படத்தின் முன்கதை. இந்தப் படத்தின் கதை, Frank விடும் ஒரு தவறை ஒட்டிப் போகின்றது. கொள்ளைக் குழு ஒன்றை கொலை செய்யும் தருவாயில், அந்தக் கள்ளர் குழுவோடு ஒற்றனாக இருந்து செயற்படும் காவல் துறை அதிகாரி ஒருவரையும் அடையாளம் தெரியாமல் கொலை செய்து விடுகின்றார் Frank. வழமையாக Punisher’இன் நடவடிக்கையை கண்டும் காணாமலும் (சிலவேளை உதவியாகவும்) இருக்கும் காவல் துறை punisher’ஐ நெருக்க வேண்டிய சூழ்நிலை. மற்றப் பக்கம் செய்த தவறினால் மனமுடைந்து punisher வேடத்தையே விட்டெறிய நினைக்கும் Frank. இவை இவ்வாறு இருக்க இன்னொரு பிரச்சினை எழுகின்றது — punisher’இன் தவறுதலான கொலையால் தமது குழு காவல் துறையினரால் ஊருடுவப் பட்டிருக்கின்றது என அறியவரும் அந்த கொலை/கொள்ளைக் குழு இறந்த அந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினை குறி வைக்கின்றது. கணவனைத் இழந்ததற்கு punisher’ஐ முழுக் காரணமாக கருதி punisher’ஐ இறந்த அந்த அதிகாரியின் மனைவி வெறுத்தாலும், அந்த விதவையையும் அவரின் குழந்தையையும் காப்பாற்றும் பொறுப்பும் punisher’இன் கையில் வந்து சேருகின்றது. அடித்து, நொருக்கி, சுட்டு, வெடித்து அவர்களை காப்பாற்றி, அந்த கொள்ளைக் குழுவை நிர் மூலமாக்குவது மிச்சக் கதை.
Punisher காதாபாத்திரம் காமிக்ஸ் புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது. எனவே, படத்தில் இருக்கும் வன்முறையையும், ‘gore’ஐயும் நெறியாக்கியிருக்கும் விதம் (editing) காமிக்ஸ் புத்தக வகையில் இருப்பது ஒருவிதத்தில் ரசிக்கக் கூடியதாக இருக்கின்றது. படத்தின் கடைசிக் கட்டத்தில் punisher எடுக்கும் முடிவும் நன்றாக இருந்தது. மற்றப்படி வழமையான ஆகஸன் படம்தான். “The Punisher” என்று 2004ல் வந்த படமும் இதே காமிக்ஸ் புத்தக கதாபாத்திரத்தைப் பற்றியதுதான் என்றாலும், அந்தப் படத்திற்கும் இந்தப் படத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆக்ஸன் விரும்பிகள் பார்க்கலாம். அதிகூடிய வன்முறைகள் இருப்பதால் சிறுவர்களிற்கான படமில்லை.