கோழி கூவுது சினிமா விமர்சனம்


கோழி விக்கிற பையனுக்கும் கோடீசுவர பெண்ணுக்கும் இடையில் வருகிற காதல் என்னவாகிறது என்பதை கிராமத்துப் பின்னணியில் தந்திருக்கிறார் கோழி கூவுது படத்தின் இயக்குநர் கே.ஐ.ரஞ்சித். நாலு நாளுல செத்துப் போற கோழி குஞ்சுகளை வாங்கி கலர் அடித்து பல விதவிதமான கோழிகுஞ்சுகளாக அவற்றை மாற்றி ஊர் ஊராக சைக்கிளில் கொண்டு போய் விற்பனை செய்கிறார் குமரேசன் (அஷோக்). கோழி குஞ்சு கொடுத்தா காசு கொடுக்கிற பொண்ணுகளுக்கு மத்தியில குமரேசனிடம் மனசைக் கொடுக்கிறா துளசி
(சீஜா ரோஸ்). பின்புதான் குமரேசனுக்குத் தெரியவருகிறது துளசி தங்கள் ஊரில் உள்ள பெரியவரின் மகள் என்பது. ஆனாலும் காதல் அவ்வளவு ஈஸியா விட்டுட்டுப் போய்விடுமா என்ன? இவர்களின் காதல் பற்றித் தெரிந்துவிட்ட பெரியவரின் தம்பி அய்யனால், குமரேசனைக் கொல்ல ஆள் அனுப்புகிறார். கடைசியில் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது க்ளைமேக்ஸ்!

கோழியை வாங்கிக் கொண்டுபோய் ஹீரோ குமரேசன் என்னதான் செய்கிறான்? என்னும் கேள்வியோடு படம் துவங்குகிறது. நமக்கும் அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. அந்த தொழிலை ஒளிவு மறைவில்லாமல் என்ன நடக்கிறது என்பதை காட்டியிருக்கிறார்கள். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளில் காதல் ஜோடியைக் கொல்வதற்காக அந்த ஆள் அவர்களை மலையை நோக்கி அழைத்துச் செல்லும் காட்சிகள் திக் திக் நிமிடங்கள். அடுத்து என்ன நடக்குமோ என்னும் திகிலை அந்த காட்சிகள் அதிகமாகவே ஏற்படுத்தியிருக்கிறது.

குமரேசன் கேரக்டரில் வரும் ஹீரோ அஷோக் கேரக்டருக்கு நன்றாகவே செட் ஆகியிருக்கிறார். இவர் கோழி கோழி என்று கோழிகளின் பெயர்களைச் சொல்லி கூவுகிற ஸ்டைலே தனி. தன் காதலி துளசியை பார்க்கப் போன இடத்தில் அவள் சித்தப்பா அய்யனாரிடம் அடிவாங்கும் போது அச்சச்சோ என உச் கொட்ட வைக்கிறார் அஷோக். தன் காதலியைப் பார்த்து, ‘செத்துத் தொலைந்து போ…’ என்று தனது அம்மா சொல்லுகிற காட்சியில் நியாயமான முறையில் அம்மாவிடம் கோபப்படும் காட்சியில் பலே போட வைக்கிறார் அஷோக்.
துளசியாக வருகிறார் புதுமுகம் சிஜா ரோஸ். ஒன்றிரண்டு காட்சிகளிலேயே நம் மனதில் ஒட்டிக் கொள்கிற முகம். இவரது கேரக்டரும் ரொம்பவே மென்மையாக இருப்பதால் நம்மை ஈஸியாக இப்ரஸ் பண்ணிவிடுகிறார் இந்த அப்பாவிப் பொண்ணு துளசி. சிரிக்கும் போது புன்னகை இளவரசியை நினைவுபடுத்துகிறார் சிஜா. நடிப்பிலும் தூள் பண்ணும் சிஜா நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் புன்னகை இளவரசியைக் காட்டிலும் ஒரு ரவுண்டு வருவார் போலிருக்கிறது.

ஹீரோவின் அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார் ரோகிணி. அழுத்தமான கேரக்டர். ஹீரோயின் பாட்டியாக வருகிறார் ஜோதி லட்சுமி. குத்தாட்டம் போடுகிறார், மிதிவண்டியில் தன் முன்னால், இளவட்ட பையனை வெச்சிக்கிட்டு மிதிவண்டியும் மிதிக்கிறார். சரியான பாட்டிதான்.

மயில்சாமி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். துளசியின் சித்தப்பா அய்யனார் கேரக்டரில் வருகிறார் போஸ் வெங்கட். முதலில் இவரது காட்சிகள் கொஞ்சம் எக்ஸ்ட்டாட்னரியாக தோன்றினாலும் போகப் போக துளசியை மட்டுமல்ல நம்மையும் கொஞ்சம் மிரள வைக்கிறார் போஸ். ஆனால் கடைசியில் ‘துளசி எனக்கும் மகள்தான் அண்ணே…’ என்று இவர் தன் அண்ணன் நரேனிடம் சொல்லும் காட்சி ரொம்பவே உருக்கமான காட்சி.

படத்தின் இன்னொரு ஹீரோ என்று கூட சொல்லலாம் துரைசிங்கம் கேரக்டரில் வருகிற நரேனை. சிறு வயதிலேயே தன்னை விட்டுப் பிரிந்து போய்விட்ட மகளிடம் இவர் ஒவ்வொரு முறை பேச முயற்சிப்பதும் மகள் மேல் தான் வைத்திருக்கும் பாசத்தை தன் மனதுக்குள்ளேயே போட்டு அடக்கிக் கொள்வதுமான அப்பா கேரக்டர். எந்த கேரக்டராக இருந்தாலும் அப்படியே மாறிப் போய்விடும் திறமை கொண்ட நரேன் இந்தக் கேரக்டரை செய்திருக்கும் விதத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன? நம்மை அறியாமலேயே இவரது கேரக்டர் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் வந்துவிடுகிறது.

கோழி கூவுது படத்திற்கு இசையமைத்திருப்பவர் இ.எஸ்.ராம்ராஜ். பின்னணி இசையை பல இடங்களில் ‘ம்யூட்’டாகவே விட்டிருக்கிறார். க்ளைமேக்ஸ் காட்சியில் பின்னணி இசை மிரள வைக்கிறது. ‘வாடாமல்லிக்காரி’ பாடலுக்கு இந்த வருடத்தின் மெலடி ஹிட் லிஸ்டில் வரிசையில் முக்கியமான இடம் தரலாம். ‘யாரோ நீ யாரோ’ பாடல் ரசிக்க வைக்கிறது. ‘சார பாம்பப் போல’ கலக்கலான குத்துப்பாட்டு. ‘எல்லோரும் ஒத்த சானு’ என்னும் ஓப்பனிங் பாடலைப் பாடியிருக்கிறார் எம்.எஸ்.வி. கடைசியில் வரும் ‘காற்றாக என் காதல்’ பாடலைப் பாடியிருக்கிறார் சங்கர்மகாதேவன்.

ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு நிறைவாகவே இருக்கிறது. படத்தொகுப்பாளர் தாசன் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஒருவேளை கிராமத்துப் படம் என்பதால் இப்படி இருக்கட்டும் என்று நினைத்தார்களோ என்னவோ!

கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஐ.ரஞ்சித். கிராமத்துப் பின்னணியில் ஏழை பணக்கார காதலை சொல்லியிருக்கிறார். அதற்காக ஹீரோவை ஏதோ ஒரு வேலை செய்பவனாகக் காட்டாமல் ஒரு வித்தியாசமான தொழில் செய்பவனாக காட்டியிருக்கிறார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget