உலக கிரிக்கெட்டிற்கு பல்வேறு மட்டத்தில் பெரிய பங்களிப்பு செய்த மாஸ்டர் பேட்ஸ்மென் மற்றும் உலகின் தலை சிறந்த பேட்ஸெமெனாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டின் 10 முக்கியக் கணங்களை தொகுக்கலாம். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக் மாறுபடினும், இந்த 10 கணங்களை சச்சினே மறக்கமாட்டார் எனலாம்.
1. ஏப்ரல் 2, 2011 உலகக் கோப்பை 2011:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் எப்போதுமே சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்துபவர். 2011 உலகக் கோப்பையின் 9 போட்டிகளில் 482 ரன்களை எடுத்தார் சச்சின் 120 ரன்களை இங்கிலாந்துக்கு எதிராக அவர் எடுத்ததுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆனால் அந்தப்போட்டி டிராவானது. உலகக் கோப்பை 2011-இல் சச்சின் 2 அரைசதம், 2 சதம் எடுத்தார். 52பவுண்டரிகள் 8 சிக்சர்கள் மற்றும் 91.98 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட். இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக சச்சினே வெற்றி ரன்களை அடிக்க நினைத்திருப்பார் ஆனால் 18 ரன்களில் அவர் வீழ்ந்தார். பிறகு கம்பீர், தோனி இந்திய அணீயை வெற்றிபெறச் செய்தனர். இதனை தன் கிரிக்கெட் வாழ்வின் சிகரமான கணம் என்று சச்சினே பின்பு அறிவித்தார்.
2. சச்சினின் 100வது சதம்!
இது சச்சினுக்கு ஒரு பெரிய தலைவலியாக விடிந்தது. ஆனால் அவர் அத்தனை நெருக்கடிகளையும் விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு ஆசியக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக இந்த 100வது சதத்தை எடுத்து முடித்தார். தோல்வி சச்சினுக்கு பிடிக்காத ஒன்று ஆனால் இந்த போட்டியில் சச்சின் உலக சாதனை புரிந்தும் இந்தியா தோல்வி தழுவியது. சச்சினுக்கு தோல்வி பிடிக்காது என்பது அவர் கேப்டனாக இருந்த காலத்தில் அடைந்த அவரது எரிச்சல் நிறைந்த வாசகங்களே தெரிவிக்கும். ஆனால் சாதனை சதம் என்பது சாதனை சதம்தானே!
3. பிராட்மேனின் கனவு அணியில் சச்சின் இடம்பெற்றது!
ஆஸ்ட்ரேலிய லெஜென்ட் டான் பிராட்மேன் அனைத்து கால சிறந்த அணியை அறிவித்தார். பிரையன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்களுக்கே இந்த அணியில் இடமில்லை. ஆனால் பிராட்மேன் சச்சினை தேர்வு செய்திருந்தார். 69 வீரர்களை டான் பிராட்மேன் அலசி 11 பேரைத் தேர்வு செய்தார். இன்டக் 69 பேரில் சுனில் கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோரும் இருந்தனர்.
4. 2003 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 98 ரன்களை மறக்க முடியுமா?
2003 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் கடினமான காலக்கட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றேயாகவேண்டிய நெருக்கடியில் இருந்தது. பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 270 ரன்களுக்கு மேல் குவித்தது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர் ஆகியோர் இருக்கும்போது இந்தியா ஜெயிக்குமா என்று பலரும் பேசினர். ஆனால் நடந்தது என்ன? சச்சின், சேவாக் இருவரும் அடித்த அடியில் முதல் 11 ஓவர்களில் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. சச்சின் ஷோயப் அக்தரை அடித்த அந்த அப்பர் கட் சிக்சரை இன்னும் மறக்க முடியாது. 98 ரன்கள் எடுத்தார் சச்சின் இந்தியா வெற்றி பெற்றது. சச்சினின் மிகச்சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று.
5. உலக சாதனை இரட்டைச் சதம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் இந்த அபார இன்னிங்ஸை ஆடினார். ஒருவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நினைத்து கூட பார்க்கமுடியாது டேல் ஸ்டெய்ன், மோர்கெல் இருக்கும்போது எங்கிருந்து 50 ரன் வரும் என்றே கூற முடியாது. ஆனால் 147 பந்துகளில் 200 ரன்களை விளாசினார் சச்சின் 25 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்தார். இந்தியா உலக சாதனை 401 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா 153 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இதற்கு முன்னர் நியூசீலாந்தில் 167 ரன்களையும் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் 175 ரன்களையும் எடுத்தபோதே சச்சின் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
6. 1999 உலகக் கோப்பையில் உணர்ச்சிகரமான சதம்!
டெண்டுல்கரின் தந்தை இறந்து போன சமயம், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சச்சின் விளையாடவில்லை. பிறகு கென்யாவுடன் விளையாட நேரிட்டது. இதற்கு முன்னர் 21 ஒருநாள் சதம் எடுத்திருந்தார் சச்சின், இந்த சதம் தந்தை இறந்தபிறகு உடனடியாக எடுத்த சதம் என்பதால் அவரது வாழ்வின் உணர்ச்சிகரமான சதமாக இது அமைந்தது. டெணுல்கர் இதில் 140 ரன்களை எடுத்தார்.
7. 1998ஆம் ஆண்டு ஷார்ஜாவில் அடித்த மணல் புயலும் சச்சின் புயலும்
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக எடுத்த் 143: இறுதிக்கு செல்ல இந்திய இத்தனி ரன்களை எடுக்கவேண்டும் என்பது நிர்பந்தம். பெவன் சதம் எடுக்க ஆஸி. 284 ரன்களை எடுத்தது. இந்தியா 285 ரன்களை எடுத்தா பிரச்சனையில்லை. அல்லது தோற்றால் குறைந்தது 254 ரன்களை எடுத்திருக்கவேண்டும். ஆனால் திடீரென மைதானத்தில் மணற் சூறைக்காற்று வீச இந்தியா வெற்றி பெற 276 ரன்களும் தகுதி பெற 237 ரன்களும் தேவை. மீண்டும் களமிறங்கிய சச்சின் தகுதி பெறுவதைக் குறிக்கோளாக வைக்காமல் உண்மையான வெற்றிக்காக ஆடினார். காச்பரோவிச்சை அடித்த சிகர்களை மறக்க முடியுமா கடசியில் ஆடிய பேயாட்டத்தை மறக்க முடியுமா? 131 பந்துகளில் 143 ரன்களை விளாசினார் சச்சின். கடைசியில் நடுவரின் மோசமான தீர்ப்புக்கு அவுட் ஆனார். இல்லையெனில் உண்மையில் இந்தப்போட்டியில் இந்தியா வெற்றியே கூட பெற்றிருக்கும்.
8. அதே ஷார்ஜா, இறுதிப் போட்டி சதம்!
24 ஏப்ரல் 1998 சச்சினின் பிறந்த தினம். அன்றைய தினம் அடித்த சதம் மறக்க முடியாதது. ஆஸ்ட்ரேலியா முதலில் பேட் செய்து 121/5 என்று திணறி பிறகு ஸ்டீவ் வாஹ், டேரன் லீமேன் இன்னிங்ஸ்கள்லினால் 272 ரன்கள் எடுத்தது. இந்தியா துரத்தக் களமிறங்கியவுடன் சச்சின் போட்டுத் தக்கவாரம்பித்தார். காஸ்பரோவிச்சை இரண்டு சிகர்கள் விளாசி அடிதடியைத் தொடங்கிய சச்சின் ஷேன் வார்ன் இதன் பிறகுதான் சச்சின் தனக்கு பயங்கர சொப்பனங்களை கொடுக்கிறார் என்றார். சச்சின் 134 ரன்கள் எடுத்தார் அந்தப்போட்டியில் ஒரு அபாரமான ஒருநாள் இன்னிங்ஸ் இதுவாகும்.
9. 2008ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலிய மண்ணில் முதல் ஒருநாள் சதம்
சச்சின் டெண்டுல்கர் அவ்வளவு ஆட்டங்களை ஆடியிருந்தாலும் ஆஸ்ட்ரேலிய மண்ணில் அவரது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 93 ரன்களாகவே இருந்தது. தோனி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் நுழைந்தது. இந்தப் போட்டியில் சச்சின் 126 ரன்களை எடுத்து இறுதி வரை ஆடி தனி மனிதனாக ஆஸ்ட்ரேலியா பந்து வீச்சை அடித்து நொறுக்கி வெற்றிபெறச்செய்தார். ஆஸ்ட்ரேலியா 239 ரன்களை எடுத்தது. ரோகித் ஷர்மாவுடன் இணைந்து சச்சின் 123 ரன்களை சேர்க்க ரோகித் 66 ரன்களை எடுத்தார். சச்சின் தனது 42வது ஒருநாள் சதத்தை எடுத்தார். இந்தியா வெற்றி பெற்றது.
அதே சிபி தொடர் இரண்டாவது இறுதிப் போட்டி சச்சின் அபாரம்!
முதல் போட்டியில் தோல்வியடைந்த கடுப்பில் ஆஸ்ட்ரேலியா இரண்டாவது இறுதிப்போட்டிக்கு வந்தது. ஆட்டம் அவர்களுக்கு சாதகமான பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது சச்சின் மற்றொரு சதத்திற்கான அபார இன்னிங்சை ஆடினார். சிறந்த கவர் டிரைவ்கள், அப்பர் கட்கள், புல் ஷாட்கள் என்று தூள் கிளப்பினார். ஆனால் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இது சச்சினின் டாப் ஒருநாள் இன்னிங்ஸ் என்பதில் ஐயமில்லை. இந்தியா 258 ரன்கள் எடுக்க ஆஸ்ட்ரேலியா 249 ரன்களி முடிந்தது. முதன் முறையாக சிபி தொடர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா சாம்பியன் ஆனது.
10. சச்சின் முதன் முதலாக ஒருநாள் போட்டியில் துவக்கத்தில் களமிறங்கிய போட்டி!
27 மார்ச் 1994- சச்சின் ஆக்லாந்தில் நியூசீலாந்துக்கு எதிராக அவராகவே கேட்டு வாங்கி துவக்கத்தில் களமிறங்கினார். சச்சின் என்றால் யார் என்றும் அவர் மீது ஒரு பயமும் ஏற்படுத்திய இன்னிங்ஸ் ஆகும் இது; பந்து வீச்சுக்கு சாதகமான கரடு முரடு பிட்சில் நியூசீலாந்து அணி 142 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா களமிறங்கும்போது இந்தப் பிட்சில் இந்தியா கஷ்டம் திக்குமுக்காட வேண்டும் என்றெல்லாம் வர்ணனையாளர்கள் தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் சச்சின் துவக்கத்தில் களமிறங்குவார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதுதான் நடந்தது.
டேனி மாரிசன், பிரிங்கிள், அடாது மழை பெய்தாலும் விடாது டைட்டாக வீசும் கெவின் லார்சன் என்று நியூசீ தன்னம்பிக்கைய்டந்தான் இருந்தது. ஆனால் என்னாவாயிற்று? சச்சின் புயல் போல் ஒரு இன்னிங்சை ஆடினார். 49 பந்துகளில் 82 ரன்களை விளாசினார் அதில் 15 பவுண்டரி 2 சிக்சர்கள். 13 ஓவர்களில் ஸ்கோர் 100-ஐ கடைந்தது. இந்தியா 23 ஓவர்களில் 143 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அப்போது துவங்கிய துவக்க வீரர் பயணம் பல அதிரடி இன்னிங்ஸ்களை கண்டபிறகே ஓய்ந்தது.
அதேபோல் என்றைக்கும் மறக்க முடியாத சச்சினின் முதல் ஒருநாள் சதம்!
சுமார் 78 போட்டிகளில் சதம் எடுக்க முடியாமல் 80களில் ஆட்டமிழந்த சச்சின் துவக்க வீரராக களமிறங்கி சில போட்டிகளேயாகிருந்தன. அப்போது இலங்கையில் சிங்க டிராபி கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 9 செப்டெம்பர் 1994ஆம் ஆண்டு சச்சின் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக தன் முதல் ஒருநாள் சததை எடுத்தார். டாஸ் வென்று இந்தியா முதலில் பேட் செய்ய சச்சின், பிரபாகர் களமிறங்கினர். கிளென் மெக்ராவை சச்சின் புரட்டி எடுத்தார். அவர் 6 ஓவர்களில் 41 ரன்களை கொடுக்க கட் செய்யப்பட்டார். மெக்டர்மட் பந்தை பிளிக்கில் சச்சின் சிக்ஸ் அடித்ததை மறக்க முடியாது. 8பவுன்டரி 2 சிகர்களுடன் அவர் 110 ரன்களை எடுத்த இன்னிங்ஸில் ஷேன் வார்னும் சாத்து வாங்கினார். இந்தியா 246 ரன்களை எடுக்க ஆஸ்ரேலியா 215 ரன்களுக்குச் சுருண்டு காலியானது.