எஸ்.எ.சந்திரசேகரின் பேத்தி ஸ்நேகா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்தப் படத்தின் கதை என்ன என்று பார்க்கலாம். ஹீரோ தமன் ஓசையின்றி இரண்டு கொலைகளைச் செய்து முடிக்கிறார். காவல்துறையோ இதற்கு எந்த சாட்சியும் இல்லாமல் போக விபத்து என்று வழக்கை முடிக்கிறது. தமனின் அக்கா ரீமாசென் உதவி கமிஷனர். அவருக்கு மட்டும் இந்தக் கொலைகளைச் செய்தது தமன் என்று தெரிகிறது. ஆனால் அவரை கைது செய்யவும் முடியாமல் தவிக்கிறார்.
எப்படியாவது சாட்சியை உருவாக்கி தமனை கைது செய்தே தீருவேன் என்று சவால் விடும் ரீமாசென் அவரை கைது செய்தாரா? என்பது க்ளைமேக்ஸ்.
ஹீரோவாக நடித்திருக்கும் தமன் ஏற்கனவே ஆச்சரியங்கள் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஆக்க்ஷன், ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் திறமை காட்டுகிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது தமனுக்கு. அதை அவர் சரியாகவே செய்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
ஹீரோயினாக வருகிறார் பியா. ஹாங்காங்கில் இவர் படம் எடுக்கப் போகிற இடங்களில் எல்லாம் தமன் என்ட்ரி கொடுக்கிற காட்சிகள் செம காமெடி. அதுக்காக ஏராளமான காட்சிகளை அப்படியே வைத்தால் எப்படி?
ஹீரோவுக்கு தோழியாக வருகிற பிந்து மாதவி ஹீரோவைக் காதலிக்கவும் செய்கிறார்.
ஹீரோவின் அக்கா உதவி கமிஷனர் வேடத்தில் வந்து கிலியை ஏற்படுத்துகிறார் ரீமாசென். அழகான ஐபிஎஸ் அதிகாரி!
இவர்கள் எல்லாம் இருந்தும் இவர்களின் கேரக்டர்கள் மட்டும் கடைசி வரை நம் மனதில் ஒட்ட மறுக்கிறது. உயிரைப் பணயம் வைத்துக் கொண்டு ஹீரோ தமன் போகிற க்ளைமேக்ஸ் காட்சியில் நமக்கு அவர் மீது பரிதாபம் வரணும்… போய் ஜெயித்து விட்டு வரணும் என்று எண்ணத் தோன்ற வேண்டும். அதைவிட்டு போனா என்ன போகாவிட்டா என்ன என்கிற மாதிரியல்லவா இருக்கிறது. கேரக்டர்களின் தனித்தன்மையையும் அழுத்தத்தையும் உருவாக்க மறந்துவிட்டார்களா? அல்லது இப்படி இருந்தாலே போதும் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?
படம் துவங்கிய ஒரு மணிநேரம் வரை எடிட்டிங் கொஞ்சம் ஆங்காங்கே திக்கித் திணறியது போன்று இருக்கிறது.
பின்னணி இசையில் பரவாயில்லை சொல்ல வைத்த விஜய் ஆன்டனி பாடல்களில் சட்டம் ஒரு இருட்டறையை கண்டுக்காம விட்டிருக்கிறார்.
ஹாங்காங்கில் காட்சி நடப்பதைக் காட்ட வேண்டும் என்பதற்காக எத்தனை முறைதான் அந்த ஹெலிகாப்டர் ஷாட்டைக் காட்டுவார்கள்?
படத்தில் அனைவருக்கும் பிடித்த காட்சி க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் எஸ்.எ.சந்திரசேகர் பேசும் வசனங்கள். குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பித்துவிடுவது குறித்து இவர் பேசும் வசனங்களுக்க ஸ்பெஷலாக ஒரு சபாஷ் போடலாம்!
சட்டம் ஒரு இருட்டறையை எஸ்.எ.சந்திரசேகரின் பேத்தி ஸ்நேகா இயக்கியிருக்கிறார். படம் துவங்குவதற்கு முன்பு இவர், கமல், ரஜினி, சிரஞ்சீவி போன்றோரிடம் ஆசி பெறுவது போன்ற காட்சி ஒளிபரப்பாகிறது. இதற்கு ஏற்றார் போல் அல்லவா படம் இருந்திருக்க வேண்டும்.