A Lonely Place to Die சினிமா விமர்சனம்


இந்தப் படத்தின் கதையை குழந்தையிலிருந்து பார்த்து வந்திருக்கிறோம். சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஹாலிவுட் இயக்குனர் டோனி ஸ்காட்டின் மென் ஆன் ஃபயர் படத்தின் கதைதான் இதுவும். குழந்தை கடத்தல். பணக்கார குடும்பத்தின் குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கதை. மென் ஆன் ஃபயர் பார்த்த போது இந்த‌க் கருவை மையமாக வைத்து இதைவிடச் சிறந்த படத்தை உருவாக்குவது கடினம் என்று தோன்றியது. டென்சில் வாஷிங்டனின் நடிப்பும், அவரது கதாபாத்திரத்தின் ட்ரைன்டு
கில்லர் பின்புலமும், ஆக்சன் காட்சிகளும், வசனங்களும் அப்படியொரு நம்பிக்கையை தந்தன. ஏ லோன்லி பிளேஸ் டூ டை படம் அந்த நம்பிக்கையை சற்று அசைத்துவிட்டது.

படத்தின் முதல் ஷாட்டிலேயே நம்மை பிடித்து படத்திற்குள் திணித்துவிடுகிறார் இயக்குனர். ஸ்காட்லாந்தின் 70க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்களை பலி வாங்கிய மிக உயர்ந்த மலைப்பகுதியில் மூன்று பேர் மலையேற்றத்தில் ஈடுபடுவதிலிருந்து படம் தொடங்குகிறது. கிளிஃப் ஹேங்கர் உள்ளிட்ட படங்களில் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்திருந்தாலும் ஹிட்ச்காக்கின் வெர்ட்டிகோ ஹீரோவைப் போல நமக்கு உயரத்தைப் பற்றிய பயம் பனிக்கட்டியாக உள்ளுக்குள் உருளத் தொடங்குவதை உணர்கிறோம். அடுத்தடுத்து இதுபோன்ற அனுபவத்தை படம் தரப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்க சட்டென்று படத்தின் திசை மாறிவிடுகிறது. முதல் பதினெட்டு நிமிடங்கள் படத்தின் கதை எது என்பதை நம்மால் யூகிக்கவே முடிவதில்லை.

எல்லோருக்கும் தெ‌ரிந்த கதையை தெ‌ரியாத பின்புலத்தில் முற்றிலும் அந்நியமான கதாபாத்திரங்களின் வழியாக சொல்லும் போது ஏற்படுகிற த்‌ரில்லும், எதிர்பார்ப்பும்தான் இந்தப் படத்தின் வெற்றி எனத் தோன்றுகிறது. ஆக்சன் கோ‌ரியோகிராஃபை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம். 

இதுபோன்ற படங்களில் கதை முழுவதுமாக தெ‌ரிய வந்த பிறகு த்‌ரில் சட்டென்று பனியாக விலகிவிடும். பிறகு வெறும் டமால் டூமீல்தான். அந்த சறுக்கலை இந்தப் படமும் எதிர்கொள்கிறது. அதனை முடிந்தவரை தவிர்க்கப் பார்த்திருக்கிறார் இயக்குனர்.

குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தமுறை அவர்களைவிட கொடிய வார் கி‌ரிமினலின் மகளை கடத்திவிடுகிறார்கள். குழந்தையை கடத்தியவர்களை பிடித்து வந்து தந்தால் லம்‌ப்பாக பணம் தருவதாக சிலரை நியமிக்கிறார். இதனை கடத்தல்காரர்கள் எதிர்பார்ப்பதில்லை. குழந்தையை பத்திரமாக மீட்டு கடத்தல்காரர்களில் ஒருவனை பிடிக்கவும் செய்கிறார்கள். ஆனால் இந்த மெயின் கதை படத்தின் இறுதியில் சிறிது நேரமே வருகிறது. மீதி கதை என்ன என்பதைச் சொன்னால் படம் பார்க்கையில் சுவாரஸியம் குறை‌ந்துவிடும் என்பதால் இத்துடன் விட்டு விடுவோம்.

இந்தப் படத்தை பி‌ரிட்டீஷ் இயக்குனர் Julian Gilbey இயக்கியிருக்கிறார். இவரைப் பற்றி இணையத்தில் போதுமான தகவல்கள் இல்லை. 2002ல் Reckoning Day என்ற படத்தை இயக்கி சினிமாவுக்குள் பிரவேசித்த இவர் இன்டிபென்டன்ட் ஃபிலிம்மேக்கராக இருப்பார் என்று தெ‌ரிகிறது. காரணம் தனது முதல் படத்தை இயக்கியதுடன் திரைக்கதை, ஒளிப்பதிவு, காஸ்ட்யூம், மேக்கப், எடிட்டிங் என்று பல்வேறு வேலைகளை அவரே செய்துள்ளார். குறிப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார்.

இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். ஏ லோன்லி பிளேஸ் டூ டை நான்காவது படம். 2011ல் வெளியானது. இவரைப் பற்றி தமிழில் யாரும் எழுதியிருப்பது போல் தெ‌ரியவில்லை. இந்தப் படம் நிச்சயம் அவரைப் பற்றியும், அவரது படங்கள் பற்றியும் அறிய துண்டுதலாக அமையும். விரைவில் இவ‌ரின் பிளாஸ்டிக் என்ற படம் வெளியாக உள்ளது. 

ஒருமுறை பார்க்கக் கூடிய படம்தான். டிவிடி கிடைத்தால் தவற விடாதீர்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget