விஸ்வரூபம் பாணியில் அமீரின் ஆதிபகவன் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபகவன். மாபியா கும்பலை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
ஆதிபகவன் படத்தில் இந்து கடவுளை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக ஐகோர்ட் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, அமீர் தன்னுடைய ராம் படத்தில், இந்து கடவுளான ராமரை, ராம் என்று சுருக்கி ஹீரோ ஜீவாவை சைக்கோ போன்று காட்டினார். இப்போது ஆதிபகவன் என்ற படத்தை எடுத்துள்ளார். படத்தின் தலைப்பு இந்து கடவுள்கள் விநாயகர் மற்றும் சிவபெருமானை குறிக்கிறது. படத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே படத்தை திரையிடுவதற்கு முன்பாக, இந்திய தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கும் திரையிட்டு காட்ட வேண்டும். மேலும் படத்தின் தலைப்பான ஆதிபகவன் என்பதையும் மாற்ற வேண்டும் என்று தங்களது புகார் மனுவில் கூறியுள்ளனர்.