"பெண்களை, "சில்மிஷம் செய்யும் ஆண்களின் கன்னத்தில், "பளார் என அறைந்து, பொதுமக்களின் கவனத்தை திருப்ப வேண்டும், என, பாலிவுட் நடிகை, ராணி முகர்ஜி, பெண்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். மும்பை, வில்லே பார்லே மேற்கு பகுதி, மகளிர் கல்லூரியில், மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மும்பை போலீசார் நடத்தினர்.
அதில், நடிகை ராணி முகர்ஜி பேசியதாவது: பொது இடங்களில், பெண்களை, "சில்மிஷம் செய்யும் ஆண்களை, சிறிதும் யோசிக்காமல், கன்னத்தில், "பளார் என அறையுங்கள். அதன் மூலம் அருகில் உள்ள பிறரின் கவனம், உங்கள் மீது திரும்பும். அதிரடியாக, அடி கொடுப்பதன் மூலம், கயவர்களை வெட்கி தலை குனிய செய்யுங்கள். எனக்கு இது போன்ற இக்கட்டான சந்தர்ப்பங்கள் பல வந்த போது, இப்படி தான் செய்தேன். அதிகளவு பாலியல் பலாத்கார சம்பவங்கள், வீடுகளில் தான் நடக்கிறது.
இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், உறவினர்கள் அல்லது குடும்ப நண்பர்களாக தான் இருக்கின்றனர். இவற்றை, பெண்கள் துணிச்சலாக எதிர்க்க வேண்டும். இவ்வாறு நடிகை, ராணி முகர்ஜி பேசினார். நிகழ்ச்சியில், மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், துணைவேந்தர் ராஜன் வெலுகர், நகர போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங், நடிகைகள் கரிஷ்மா கபூர், ஷப்னா ஆஸ்மி, அவரது கணவரும், கவிஞருமான, ஜாவேத் அக்தார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய, போலீஸ் கமிஷனர், சத்யபால் சிங், ""சில்மிஷத்தில் ஈடுபடும் நபர்களை நாங்கள் அடிக்க முடியாது; பெண்கள் அடிக்கலாம், என்று கூறினார்.