வீரப்பன்… தமிழக கர்நாடக அரசுகளுக்கும் காவல்துறைக்கும் பெரும் தலைவலியாகவும் சிம்ம செப்பனமாகவும் விளங்கிய கடத்தல்காரன். வீரப்பனை கெட்டவன் என்று சொல்பவர்களை விட நல்லவன் என்று சொல்பவர்கள்தான் அதிகம். அப்படிப்பட்டவன் ஒருநாள் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்படுகிறான்.வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது சில சர்ச்சைகளையும் அப்போது உருவாக்கியது.
அதனாலேயே, வனயுத்தம் படத்தை வீரப்பன் கதை என்று சொன்னதும் அப்போ வீரப்பன் கொல்லப்பட்டதை எப்படி காட்டியிருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும் அதை தெரிந்து கொள்ளும் ஆவலும் தொற்றிக் கொண்டது.
வீரப்பன் நம் சமகாலத்தில் வாழ்ந்து வந்தவன் என்பதால் அவன் பற்றிய பல்வேறு சம்பவங்களையும் கதைகளையும் நிறைய கேட்டிருப்போம்… படித்திருப்போம்.
அதனால் படத்தின் கதையைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் படத்தில் என்னதான் பதிவு செய்திருக்கிறார்கள்…?
வீரப்பன் செய்த கடத்தல்கள், கன்னட ராஜ்குமார் கடத்தப்பட்டது, வீரப்பனால் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்படுவது போன்ற சம்பவங்களே படத்தின் இடைவேளை வரை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன.
இரண்டாவது பாதியில் தமிழக காவல்துறை அதிகாரி விஜயகுமாராக வரும் அர்ஜூனிடம் வீரப்பனை சுட்டுத் தள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட வீரப்பனை அவர் எப்படி நயவஞ்சகமாக திட்டம் போட்டு போட்டுத் தள்ளுகிறார் என்பது இரண்டாவது பாதியில் சொல்லியிருக்கிறார்கள்.
வீரப்பன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எல்லாம் சொல்ல வேண்டுமானால் நிச்சயம் இரண்டரை மணி நேர சினிமா அதற்கு போதாது. சீரியல்தான் எடுக்க வேண்டும். அதையும் எடுத்துவிட்டார்கள்.
எனவே முக்கியமாக கண்டிப்பாக வைத்தே ஆக வேண்டும் என்னும் காட்சிகளை மட்டுமே படத்தில் வைத்திருக்கிறார்கள்.
வீரப்பனின் சின்ன வயது காட்சிகள், வீரப்பன் காவல்துறை அதிகாரிகள் போட்டுத் தள்ள ஆரம்பித்ததற்கான முக்கியமான காரணங்களாக சொல்லப்படும் அங்குள்ள பெண்களிடம் தவறாக நடந்த போலீஸ்காரர்கள், வீரப்பன் மனைவி சம்பந்தப்பட்ட காட்சிகள் என நிறைய காட்சிகளை வைக்க சென்சார் போர்டு அனுமதிக்கவில்லையாம்.
இதனால்தானோ என்னவோ படத்தின் முதல் பாதி கட் அன்ட் பேஸ்ட் காட்சிகள் மாதிரி வந்து போகிறது.
தமிழ்நாடு காவல்துறை எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் அடுத்து என்ன நடக்கும்… என்னும் சஸ்பென்ஸை ஏற்படுத்துகிறது.
அதிரடிப்படை டிஐஜியாக வரும் அர்ஜூன், வீரப்பன், வீரப்பன் அண்ணன், காவல்துறை அதிகாரிகள் அனைவருக்குமே நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே படத்தில் இருப்பதால் கொஞ்சம் கூட கற்பனையை கலக்க முடியாவாறு ஆகியிருக்கின்றன காட்சிகள்.
படத்தில் வீரப்பனாக வரும் கிஷோர் நிஜமான வீரப்பன் போன்றே மாறிப் போயிருக்கிறார். வீரப்பன் கூடவே இருக்கும் சம்பத்ராம், அந்த மிலிட்டரி பெரியவர், செந்தாமரைக் கண்ணன் என முக்கியமான கதாப்பாத்திரங்கள் நடிப்பில் செம ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு காவல்துறை கைவசம் வீரப்பன் ‘கதை முடிக்கும் திட்டம்’ ஒப்படைக்கப்பட்டதுமே படம் தமிழக அரசுக்கு சிங்கி அடிப்பது போன்ற ஒரு ஃபீல் வந்துவிடுகிறது.
அதை மெய்ப்பிப்பது போன்றே இருக்கிறது படத்தின் முடிவில் வரும் ‘இந்த அரசு இது போன்று அநீதி செய்பவர்கள் யாராக இருந்தாலும் சும்மா விடாது…’ என்பது போன்று வரும் டயலாக்.
படம் முடிந்த பிறகு வரும் வீரப்பன் பற்றிய தகவல்களை வனயுத்தம் டீமினர் திரட்டியது பற்றி வரும் க்ளிப்பிங்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
நன்றி – தமிழ் டிஜிட்டல் சினிமா டாட்காம்