குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 3 லட்சம், பிறந்த 24 மணி நேரத்திலே இறந்துவிடுகின்றன. இந்த சோகத்தில் இந்தியாவிற்குதான் முதலிடம். குழந்தைகளின் இறப்பு பாகிஸ்தானில் 60 ஆயி ரமாகவும், சீனாவில் 50 ஆயிரமாகவும் இருக்கிறது. பிறந்த 24 மணி நேரத்தில் குழந்தைகள் இறப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கிய
காரணமாக இருப்பது குறைப் பிரசவம். 

தாயின் கருப்பையில் உருவாகும் சிசு, 37 வாரங்கள் அங்கேயே இருந்து, வளர்ச்சியின் முதல் கட்டத்தை பூர்த்திசெய்த பின்பு பிறப்பது முழுமையடைந்த பிரசவம். முதல்கட்ட வளர்ச்சி முழுமை அடையாமலே (37 வாரங்களுக்கு முன்பே) பிறக்கும் குழந்தைகளை குறைப் பிரசவ குழந்தைகள் என்று சொல்கிறோம். 

குறைப் பிரசவ குழந் தைகளின் சுவாசப் பகுதி கட்டமைப்புகள் முழு வளர்ச்சியை பெற்றிருக்காது. அதனால் அவைகள் சுவாசிக்க முடியாமல் திணறும். நுரையீரலின் உள்ளே பலூன் போன்று நிறைய வாயு அறைகள் உள்ளன. அவற்றில் காற்று நிறைவதும், பின்பு அது வெளியே வருவதும் தான் உயிரை நிலைநிறுத்துகிறது. 

குறைப் பிரசவ குழந்தைகளின் வாயு அறைகள் முழுமையான செயல் திறனை பெற்றிருக்காது. அவைகள் சுவாசத்தை உள்ளே இழுத்து வாயு அறைகளை நிரப்பினாலும், அவைகளால் காற்றை வெளியிட முடியாது. அதனால் குழந்தைகள் சுவாசிக்க முடியாமல் திணறும். உடனடியாக வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் கொடுத்துதான் இவைகளை காப்பாற்றவேண்டும். 

எல்லாவிதமான சீதோஷ்ண நிலைகளையும் எதிர்கொண்டு தாக்குப்பிடிக்கும் ஆற்றலுடன் முழு பிரசவ கால குழந்தைகள் பிறக்கின்றன. குறைப்பிரசவ குழந்தைகளிடம் அந்த தாக்குப் பிடிக்கும் ஆற்றல் குறைவாக இருக்கும். அதனால் சூடு, குளிர் போன்ற சீதோஷ்ண நிலைகளை எதிர்கொள்ள முடியாமல் அந்த குழந்தைகள் தவிக்கும். 

அத்தகைய குழந்தைகளை உடனடியாக, ‘நியோ- நேட்டல் இன்டன்ஸீவ் கேர் யூனிட்’டுக்குள் அனுமதித்து, ‘பாடி வாமர் சப்போர்ட் சிஸ்டத்தின்’ மூலம் காப்பாற்ற வேண்டும். பிறந்த உடன் குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பது இயற்கையானது. இந்த இயற்கையான செயல்பாடுகூட, குறைப்பிரசவ குழந்தைகளிடம் இருக்காது. 

குழந்தைக்கு, தாயின் மார்பில் இருந்து பாலை உறிஞ்சும் திறன்தேவை. வாய்க்குள் நிறைத்து, பின்பு அது உள்ளே விழுங்கப்பட வேண்டும். இது பல உறுப்புகள் இணைந்து செயல்படவேண் டிய வேலை. இந்த திறன், குறைப்பிரசவ குழந்தைகளுக்கு பெரும்பாலும் இருக்காது. உறிஞ்சும் சக்தியோ, அதை வாய்க்குள் நிறைக்கும் சக்தியோ, விழுங்கும் சக்தியோ இல்லாமல் இருக்கும். 

பால் குடிக்க முடியாத குழந்தைகளுக்கு செயற்கை முறையில் பால் புகட்டவேண்டும் அல்லது குளுகோஸ் டிரிப் செலுத்தவேண்டும். குறைப்பிரசவ குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் பிறந்த 24 மணிநேரத்திலே ஜலதோஷம் போன்ற சாதாரண நோய்கள்கூட தாக்கத் தொடங்கிவிடும். 

ஜலதோஷம் இன்பெக்ஷனாக மாறி, சுவாச பகுதிகளிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். குறைப் பிரசவ குழந்தைகள், பெரும்பாலும் நிறை பிரசவ குழந்தைகளைப் போல் வேகமாக வளராது. குறைப் பிரசவ குழந்தை களில் சில ஊனமாகவும் மாறலாம். 37-வது வாரத்திற்கு பதில், 36-வது வாரத்தில் குழந்தை பிறந்தாலும் அது இயல்பான பிரசவமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

ஆனால் 34, 35-வது வாரங்களில் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கும் தாய்க்கும் ஆரோக்கிய பிரச்சினைகள் உருவாகும். ஒரு சில தாய்மார்களுக்கு 26-28 வது வாரத்திலும் குழந்தை பிறந்துவிடுகிறது. அத்த கைய குழந்தைகளை காப்பாற்றுவது கடினம். 

காப்பாற்றினா லும் அவர்கள் பெரும்பாலும் முழு வளர்ச்சியடையாத ஸ்பெஷல் சில்ட்ரன் என்ற நிலைக்குரியவர்களாகிவிடுகிறார்கள். அவர்களுக்கு இன்குபேட்டர் வசதி தேவைப்படும். பிரசவத்திற்கு பிறகு தாயும், குழந்தையும் அதிக நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டியதிருக்கும். 

கர்ப்பகாலத்தின் தொடக்கத்திலே கர்ப்பிணிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள் அவர்களது கர்ப்பத்தின் தன்மைக் கேற்ப ஹை ரிஸ்க் பிரக்னென்சி, லோ ரிஸ்க் பிரக்னென்சி என்று இருவகையாகப் பிரித்து, அதற்கு தக்கபடி மருந்து மற்றும் உணவுகளை பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வயது அதிகம், கர்ப்பத்தில் பாரம்ப ரியமாகவே நெருக்கடியை சந்திப்பவர்கள் ‘உயர் பாதிப்பு கொண்டோர்’ பட்டியலில் இடம்பெறுகிறார்கள். 

இவர்களுக்குத்தான் பெரும்பாலும் குறைப்பிரசவ குழந்தைகள் பிறக்கின்றன. முழுவளர்ச்சிக் காலத்தை எட்டாமல், குறைப் பிரசவமாக குழந்தைகள் பிறக்க என்ன காரணம், திருமணமாகி 5-10 வருடங்கள் வரை தாய்மை அடையாத பெண்கள் அதன் பிறகு நவீன முறையிலான குழந்தையின்மைக்கான சிகிச்சைக்கு வருகிறார்கள். அப்போது அவர்கள் வயது கிட்டத்தட்ட 35 ஆகிவிடுகிறது. 

அதன் பிறகு ஐ.வி.எப். போன்ற நவீன குழந்தையின்மை சிகிச்சை முறைகளில் கர்ப்பமாகும் பெண்களுக்கு குறைப்பிரசவ வாய்ப்பு அதிகம். அதில் ஏற்படும் ‘ரிஸ்க்’கை தவிர்ப்பதற்காக சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. 

வேலை மனஅழுத்தம்....... 

தற்போது பெரும்பாலான பெண்கள் அலுவலகப் பணியாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கர்ப்பக்காலத்திலும் ஒன்பது மாதம் வரை வேலைக்கு செல்கிறார்கள். பாதுகாப்பாக சென்று, வேலையை ரசித்து, அமைதியாக செய்தால் பாதிப்பு இல்லை. ஆனால் இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் கர்ப்பிணிகள் வேலையில் அமைதியை இழந்து, மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். 

பஸ்களிலும், ஆட்டோக்களிலும் பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொள்கிறார்கள். மாடிப்படி ஏறி இறங்குகிறார்கள். முறையான உணவுப் பழக்கத்தையும் கையாளுவதில்லை. இதுவும் குறைப்பிரசவத்திற்கு காரணம். 

கர்ப்பகால செக்ஸ்..... 

பொதுவாக கர்ப்பகாலத்தில் செக்ஸ் தவிர்க்கப்படவேண்டியதில்லை. ஆனால் கர்ப்பிணியின் நிலையை உணர்ந்து, வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படாத அளவுக்கு சவுகரியமான ‘பொஷிஷனில்’ மேற்கொள்ளவேண்டும். ரத்தப்போக்கு இருந்தாலும், செக்சை தவிர்க்க வேண்டும். கர்ப்பகாலத்தில் ‘பொறுப்பற்ற’ முறையில் மேற்கொள்ளப்படும் செக்ஸ் செயல்பாடும் குறைப் பிரசவத்திற்கு காரணமாகும். 

பயணம் தவிர்க்க....... 

கர்ப்பகாலத்தில் தூர பயணத்தை தவிர்க்கவேண்டும். அதிக எடையை தூக்கக்கூடிய வேலை மற்றும் எடையை தூக்கக்கூடிய உடற்பயிற்சி செய்யாமல் இருக்க வேண்டும். மாடிப்படி ஏறி இறங்குவதை தவிர்க்க வேண்டும். உடல் இயக்கமே இல்லாமல் எப்போ தும் படுத்தே கிடப்பதையும் தவிர்க்கவேண்டும். 

சத்துக் குறைபாடு........ 

பெண்களிடம் இருக்கும் சத்துக்குறைபாடும், குறைப் பிரசவத்திற்கான காரணமாகிறது. 150 செ.மீ.க்கு குறைவான உய ரமும், 50 கிலோவிற்கு குறைவான எடையும் கொண்ட கர்ப்பிணிகள் குறைப் பிரசவ குழந்தைகளை பெற்றெடுக்கும் சூழ்நிலை அதிகம். எதிர்காலத்தில் குறைப்பிரசவ குழந்தைகளை பெற்றெடுத்துவிடக்கூடாது என்று கருதும் பெண்கள் இப்போதே ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். தேவையான உடற்பயிற்சிகள் செய்து உடலுக்கு வலு ஏற்றிக்கொள்ளவும் வேண்டும். 

சர்க்கரை நோயாளிகள்.... 

சர்க்கரை நோய் கொண்ட கர்ப் பிணிகள் கர்ப்பகாலத்தில் மிக கவனமாக இருக்கவேண்டும். சரியான பராமரிப்பு, உணவு பழக்கம், மருந்துகளை சாப்பிட்டு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கா விட்டால் குறைப் பிரசவமாகிவிடும். சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு கொண்ட கர்ப்பிணிகளும் உடலை கவனமாக பராமரிக்கவேண்டும். 

அவர்கள் அரிசி, கிழங்கு வகை உணவுகளை கர்ப்பகாலத்தில் வெகுவாக குறைப்பது நல்லது. பலாப்பழம், மாம்பழம் தவிர்க்கவேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுவது நல்லது. உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் குறைப்பிரசவம் தோன்றும். அதனால் கர்ப்பிணிகள் நிறைய தண்ணீர் பருகவேண்டும். மனதையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டும். 

எல்லாவற்றையும் சொல்லுங்கள்........ 

சரியான டாக்டரை தேர்ந்தெடுத்து, கர்ப்பமான தொடக்கத்தில் இருந்தே அவரிடம் பரிசோதனைக்கு செல்லுங்கள். எல்லாவற்றையும் அவரிடம் கூறுங்கள். காலந்தவறாது ஆலோசனைகளை பெற்று, பின் பற்றுங்கள். குறைப் பிரசவத்தை தடுக்க நவீன மருத்துவ முறைகள் நன்றாக கைகொடுக்கின்றன. அதை முழுமையாக பயன்படுத்தி, நிறை மாதத்தில் ஆரோக்கிய குழந்தைகளை பெற்றெடுப்பதற்கு தாய்மார்கள் முன்வரவேண்டும். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget