வெற்றியை துரத்தி பிடிப்பது எப்படி?

இன்றைக்கு பரபரப்பாய் பல்வேறு துறைகளில் ஓடிக் கொண்டிருக்கிற பலரையும் ஒருகணம் நிறுத்தி எதற்காக இந்த ஓட்டம் என்று கேட்டுப் பாருங்கள். பாதிப்பேராவது வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதாக சொல்வார்கள். இப்போது உங்களுக்குள் அடுத்த கேள்வி வரும். 

ஓடிக் கொண்டே இருந்தால் வெற்றி தேடி வந்து விடுமா? ஓட்டப்பந்தயத்தில் எல்லாரும் தான் ஓடுகிறார்கள்.
முதலில் ஓடி வருபவரை வெற்றி தேவதை அரவணைத்துக் கொள்கிறாள். பரிசுகளும் பாராட்டும் அவர்களை திக்கு முக்காடச் செய்து விடுகிறது. 

இந்த ஓட்டத்தில் மட்டுமே ஓடி முடித்ததும் வெற்றி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. மற்ற ஓட்டங்கள் அப்படியல்ல. களைப்பில்லாமல் ஓடப் பழகிக் கொள்ள வேண்டும். ஓடுவது தெரியாமல் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். வெற்றியின் விலாசம் தட்டுப்படும்வரை இந்த ஓட்டம் தொடர வேண்டும். 

வெற்றி பெறுகிறவர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை. அதேநேரம் அவர்கள் செய்வதெல்லாம் வித்தியாசமாகி விடுகிறது என்கிறார், அறிஞர்ஷிவ் கீரா. பெரும்பாலும் நம்முடைய மனப்பான்மையில் தான் பல விஷயங்கள் தீர்மானிக்கப்படுகிறது. 

காய்கறி மார்க்கெட்டுக்கு செல்கிறோம். எதையெதை வாங்க வேண்டும் என்று லிஸ்ட் போட்டு விட்டே கடைக்கு வந்திருப்போம். ஆனால் மார்க்கெட் வந்து குறிப்பிட்ட காய்கறி கண்ணில் பட்டதும், 'அட இதை எப்படி மறந்தோம்' என்கிற எண்ணம் ஆச்சரியமாக மனதுக்குள் மலரும். அப்போதே மெனு மாறும். 

பார்த்ததும் மனதோடு ஒட்டிக் கொண்ட காய்கறி நம் கூடைக்குள் ஏறும். போகிற போக்கில் இப்படியான சிந்தனைக்குள் பலரும் வருவது தவிர்க்க முடியாதது. இதில்கூட சில மாற்று சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். வாங்க எண்ணிய காய்கறி கிடைக்கவில்லையென்றால் நாலு கடை அலைந்தாவது அதை வாங்கப் பார்ப்பார்களே தவிர, மறந்தும் வேறு காய் கறி பக்கம் பார்வையைக்கூட திருப்ப மாட்டார்கள். 

சில நேரங்களில் கொஞ்சமும் எதிர்பாராத பிரச்சினையில் அறிந்தோ அறியாமலோ மாட்டிக் கொள்வோம். அப்போது 'அய்யோ இது எனக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதது ஆயிற்றே. இதில் போய் நான் எப்படி மாட்டினேன்?' என்று வாய் விட்டு புலம்புவீர்கள். 

இம்மாதிரியான பிரச்சினையில் ஆணிவேர் கடைசியில் உங்களின் இன்னொரு பிரச்சினையை தீர்ப்பதாக அமையும். பஸ் நிறுத்தத்தில் அந்த கல்லூரி மாணவி நின்று கொண்டிருந்தாள். அவளை இளைஞன் ஒருவன் தினமும் கிண்டல் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தான். 

ஒருநாள் தற்செயலாக இதைப்பார்த்த பெரியவர் ஒருவர் நேராக அந்த இளைஞனை நெருங்கி அவன் கன்னத்தில் ஓங்கி விட்டார், ஒரு அறை. கிராமத்து முறுக்கேறிய அந்த கையின் வலிமை தாங்காமல் அறை வாங்கிய இளைஞன் அப்படியே கண்கள் தட்டாமாலை சுற்ற தரையில் உட்கார்ந்து விட்டான். 

இளைஞனால் கிண்டல் செய்யப்பட்ட பெண் அந்தப் பெரியவரின் அண்ணன் மகள். அண்ணன்-தம்பி இடையே குடும்பத்தில் நடந்த சொத்துப் பிரச்சினை பேச்சுவார்த்தைக்கு தடையாக இருந்தது. இவர்களின் சொத்துபத்துகள் பற்றி இவர்கள் பேசுவதற்குப் பதிலாக கோர்ட்டில் இவர்கள் வக்கீல்கள்பேசிக் கொண்டார்கள். 

இப்படியான ஒரு நிலையில் தான் அண்ணன் மகள் இளைஞன் ஒருவனால் கிண்டல் செய்யப்படுவதை பார்க்கிறார், அந்த பெரியவர். அவரையும் மீறி வெளிப்பட்ட ரத்தப்பாசம், அண்ணன் மகளை காக்கும் கவசமாக மாறி விடுகிறது. ஒரு தீமை நுகரப்பட்ட நேரத்தில் நன்மை புகுவது என்பது இப்படித்தான். 

இதனால் நமக்கு வேண்டாததெல்லாம் நடக்கிறதே என்று தோன்றும் சமயங்களில் கவலையைத் தவிருங்கள். அதில் கூட எங்கோ ஒரு நல்லது ஒளிந்திருக்கலாம். அறிஞர் ஷிவ்கீரா இப்படிச்சொல்கிறார். நீங்கள் ஒரு காரியத்தில் ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் முதலில் உங்களிடம் இருக்கிற தன்னம்பிக்கைக்குறைவான நண்பர்களை துரத்துங்கள். 

அவர்கள் அருகில் இருந்தால் உங்கள் ஒவ்வொரு முயற்சிக்கும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் போகப்போக உங்கள் தன்னம்பிக்கை மீது உங்களுக்கே சந்தேகம் வந்து விடும். குறிப்பாக சிங்கக்கூட்டம் வேட்டையாடும்போது பார்த்தால், அவை கூட்டமாக எதிர்ப்படும் மான்களில் இருந்து ஒரு மானை மட்டும் தங்கள் இரையாக முதலிலேயே தேர்ந்தெடுத்து விடும். 

அதன்பிறகே அந்த மானை மட்டும் குறிவைத்து துரத்தத் தொடங்கும். கூட்டத்தில் இருந்து அந்த மானை பிரித்தெடுக்கும் முயற்சியை தொடங்கும். இதற்கிடையே அந்த குறி வைக்கப்பட்ட அந்த மானை விடவும் கொழுத்த மான் எதிர்ப்பட்டால் கூட அதை வேட்டையாடாது. இரைக்கான குறியை மட்டுமே தீவிரப்படுத்தி துரத்திப் பிடித்து வேட்டையாடும். 

இந்த வேட்டை முடியும் வரை வேறு எந்த சிந்தனையும் அதன் மூளையில் ஏறவே ஏறாது. கொண்ட குறியில் மட்டுமே முழு கவனத்தையும் வைப்பவர்கள் சிரமேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுமே சிங்க வேட்டை மாதிரி இருந்தால் போதும், வெற்றி நிச்சயம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget