போஸ்ட்மென் இன் தி மவுண்டன் -- ஹாலிவுட் கண்ணோட்டம்


நல்ல சினிமாக்களில் இருவகை உண்டு. மனதின் இருண்டப் பக்கங்களையும், சிடுக்குகளையும் எவ்வித முகமூடியும் இன்றி விரிவாக எடுத்துரைப்பவை முதல்வகை. பிரிட்ஸ் லாங்கின் எம், ஜப்பான் படமான விமன் இன் தி சேன்ட் டியூன்ஸ் போன்றவற்றை இவ்வகை படங்களுக்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தத் திரைப்படங்கள் பார்வையாளனுக்கு குழப்பத்தையும், கேள்விகளையும் உருவாக்குபவை. அவனை நிம்மதியிழக்கச் செய்பவை.
அறிவுதளத்தில் இயங்கும் இவ்வகைப் படங்களே நமது சிந்தனையை மேம்படுத்துகின்றன. இரண்டாவதுவகை மனிதர்களின் நேர்மறை எண்ணங்களை தூண்டும் படங்கள். மஜீத் மஜீதியின் சில்ட்ரன் ஆஃப் ஹெவன், ஷாங் இமுவின் ரோடு ஹோம், நாட் ஒன் லெஸ் போன்றவை இதற்கு உதாரணங்கள். 1999 ல் சீன இயக்குனர் Huo Jiaசூqi இயக்கத்தில் வெளியான போஸ்ட்மென் இன் தி மவுண்டன் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.


பார்வையாளனின் நேர்மறை எண்ணங்களைத் தூண்டும் படங்கள் கதையின் மீது நகர்வதில்லை. கதை ஒரு பாவனை. அவை பார்வையாளர்களின் உணர்வுகளின் மீதே பயணிக்கின்றன. எளிமையும், நேரடித்தன்மையும் இப்படங்களின் ஆதாரமாக உள்ளன. வெளிப்பார்வைக்கு எளிமையாகத் தோற்றமளித்தாலும் அந்த எளிமையை திரையில் கொண்டு வருவதே ஒரு இயக்குனரின் மிகப்பெரிய சவாலாக அமைகிறது.


போஸ்ட்மென் இன் தி மவுண்டன் எளிமையான கதையைக் கொண்டது. எண்பதுகளில் நிகழ்வதாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதையில் வரும் போஸ்ட்மேன் சீனாவின் மலைகள் நிறைந்த பகுதியில் கால்நடையாகச் சென்று தபால்கள் விநியோகிப்பவர். வயதானதால் அவருக்கு மூட்டுகளில் கடுமையான வலி. உயரதிகாரியின் வற்புறுத்துதலால் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்று, தனது பணியை தனது இளவயது மகனிடம் ஒப்படைக்கிறார். படம், மகன் முதல்நாள் தபால்கள் விநியோகிக்க செல்வதுடன் தொடங்குகிறது. முதல்நாள் என்பதால் மகனுக்கு வழிகாட்டியாக தந்தையும், அவருடன் எப்போதும் இணைபிரியாமலிருக்கும் நாயும் செல்கின்றனர்.


தபால்கள் விநியோகிக்கும் பணியில் பல கிராமங்களைக் கடந்து அவர்கள் சுமார் 115 கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டும். முழுக்க மலைப்பாங்கான பாதை. பல்வேறு கிராமங்கள். வழி நெடுகில் இயற்கையின் அள்ள முடியாத பேரழகு. இந்தப் பணத்தின் போது நடக்கும் சிறு சம்பவங்கள் மகனுக்கு தந்தை மீதான புரிதலை அதிகப்படுத்துகிறது. அவர் எத்துணை நேர்மையான உண்மையான மனிதர் என்பதை தெரிந்து கொள்கிறான். தந்தையிடமிருந்து தான் எவ்வளவு தூரம் விலகியிருக்கிறோம் என்பதும் அவனுக்கு தெரிய வருகிறது. பல நாட்கள் தொடரும் அந்தப் பயணத்தின் முடிவில் அவன் தந்தையை புரிந்து கொண்ட, வாழ்வின் அர்த்தத்தை உணரக் கூடிய முழுமையான மனிதனாகிறான். 


அப்பாவுக்கும், மகனுக்குமான உறவை சொல்லும் திரைப்படங்கள் உலக அளவில் குறைவாகவே உள்ளன. அந்த அரியவகையில் சிறப்பான இடம் இப்படத்துக்கு உண்டு. தந்தையின் மீது கிராமத்தவருக்கு இருக்கும் மரியாதையை காணும் போதும், தனது தொழில் மீது அவர் கொண்டிருக்கும் சிரத்தையை தெரிந்து கொள்ளும் போதும் மகனின் மனம் தந்தையின் விசாலமான உருவத்தை உணரத் தொடங்குவதை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். குறிப்பாக ஆளமற்ற விசால ஓடையை தனது தந்தையை தோளில் சுமந்தபடி கடக்கும் அந்தக் காட்சி.


பெண்களின் உலகத்துக்கும் இந்தப் படம் முக்கியத்துவம் அளிக்கிறது. மலைக் கிராமத்தில் இளைஞன் சந்திக்கும் பெண்ணைப் பற்றிய பேச்சு வருகையில், இளைஞன் தனது தாயை நினைவுகூர்கிறான். மலைக் கிராமத்தைச் சேர்ந்த அவள் திருமணமாகி அடிவாரத்துக்கு வந்தபின் தனது கிராமத்துக்கு சென்றதேயில்லை. ஆனால் அவளின் நினைவுகளில் விருப்பத்துக்குரிய இடமாக அவளின் கிராமமே இருக்கிறது. திருமணத்தால் ஏற்படும் இந்த இடப்பெயர்வு ஒரு பெண்ணின் அக உலகை எவ்வளவு ஆழமாக துண்டாடுகிறது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தக் காட்சியின் போது மலையாள கவிஞர் சச்சிதானந்தின் நினைவில் காடுள்ள மிருகம் கவிதையும், பால் சக்கரியாவின் இரண்டாவது குடியேற்றம் கதையும் நினைவில் வருகின்றன.


இளைஞன் தன்னுடன் ஒரு ரேடியோவை எடுத்துச் செல்கிறான். அந்த ரேடியோவின் வழி பாப் இசையை படம் நெடுகிலும் நாம் கேட்கிறோம். அதேபோல் இயற்கையின் அழகு பெரும் அருவியாக பொழிந்து கொண்டேயிருக்கிறது. 


இந்த அற்புதமான படத்தை Peng Janming என்ற சீன எழுத்தாளரின் சிறுகதையை அடிப்படையாக வைத்து Huo Jiaசூqi இயக்கியுள்ளார். குழப்பங்களும், நிராசைகளும், ஏமாற்றங்களும் சூலும்வேளையில் இப்படம் நம்மை அதிலிருந்து மீட்டெடுக்கும்.
போஸ்ட்மென் இன் தி மவுண்டன்
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget