சத்தியமாக நான் கவுண்டமணியை இமிடேட் செய்து காமெடி பண்ணவில்லை. என்னுடைய ஸ்டைல் தனி, என்று கூறியுள்ளார் இன்றைக்கு முன்னணியில் உள்ள காமெடியன் சந்தானம். தமிழ் சினிமா காமெடியன்களில் தனிச் சிறப்பு கவுண்டமணிக்கு உண்டு. காட்சியை சொன்னாலே போதும், இன்ஸ்டன்டாக வசனத்தை கொட்டும் ஆற்றல் படைத்தவர் கவுண்டர்.
அதேபோல, 'லொள்ளு' என்ற வார்த்துக்கு 100 சதவீத அர்த்தமாக திரையில் கலக்கியவர்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு, வந்த வாய்ப்புகளையும் வேண்டாம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார் கவுண்டமணி. அது வடிவேலுவுக்கு சாதகமாகிவிட்டது. அவர் உச்சத்துக்குப் போனார்.
அரசியல் பிரச்சினையில் கட்டாய, ஆனால் தற்காலிக ஓய்வுக்கு வடிவேலு தள்ளப்பட, சந்தானத்துக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்துவிட்டன வாய்ப்புகள். இன்றைய தேதிக்கு அவர்தான் நம்பர் ஒன் காமெடியன்.
ஆனால் ஆரம்பத்திலிருந்தே அவர் கவுண்டமணியைக் காப்பியடித்து காமெடி செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆரம்பத்தில் இதை ஒப்புக் கொண்டவர்தான் சந்தானம்.
ஆனால் ஒரு கட்டத்தில், கவுண்டமணி பெயரை உச்சரிப்பதைக் கூட தவிர்த்தார் சந்தானம். எனக்குப் பிடித்த காமெடி நடிகர் தங்கவேலுதான் என்று கூற ஆரம்பித்தார். அட ங்கொக்கா மக்கா... இப்படி தெரிஞ்சே புளுகறாரே என்று பலரும் கமெண்ட் அடித்த நிலையில், ஆனந்த விகடனில் வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் சந்தானம்.
அந்த கேள்வியும் சந்தானம் அளித்த பதிலும்...
''நீங்க கவுண்டமணியைப் பயங்கரமா இமிடேட் பண்றீங்கனு நான் சொல்றேன்... கரெக்டா?''
''அது என்ன மாய மந்திரம்னு தெரியலை... விகடன் ஆளுங்க எடுக்குற பேட்டியில மட்டும் இந்தக் கேள்வி ரிப்பீட் ஆகிட்டே இருக்கு. இதை வாசகர்கள்தான் கேக்குறாங்களா, இல்ல... விகடன்ல உள்ளவங்களே எழுதிப்போட்டுக் கேக்குறாங்களானு தெரியலை. பரவாயில்லை... இந்தவாட்டியும் சமாளிப்போம். என் முதல் படம் 'மன்மதன்’. அதுல ஃபர்ஸ்ட் ஹாஃப் முழுக்க கவுண்டமணி சார்தான் காமெடி. செகண்ட் ஹாஃப்லதான் என் காமெடி. மகுடேஸ்வரன் சொல்ற மாதிரி, அவரை நான் இமிடேட் பண்ணி இருந்தா, படம் முடிஞ்சதுமே, 'அடேய்... இந்த சந்தானம் பய கவுண்டமணி மாதிரியே பண்றான்ப்பா’னு சொல்லி அப்பவே காலி பண்ணியிருப்பாங்க. ஆனா, அப்படில்லாம் எதுவுமே நடக்கலையே நண்பா.
ஒருவேளை நான் சப்ஜாடா எல்லாரையும் கலாய்க்கிறதால, நீங்க இப்படிச் சொல்றீங்கனு நினைக்கிறேன். வழக்கமா கவுண்டமணி சார் செந்திலை மட்டும்தான் அதிகமாக் கலாய்ப்பார். நான் என்கூட நடிக்கிற எல்லாரையுமே செந்திலா நினைச்சுக் கலாய்க்கிறேன். அதனால, அவரைஇமிடேட் பண்ற மாதிரி உங்களுக்குத் தோணலாம். ஆனா, உங்க கிரீடம் மேல சத்தியமா நான் அவரை இமிடேட் பண்ணலை!''
சந்தானம் சொல்றது சரிதானா.. மக்களே, நீங்களே பாத்துக்கங்க!