கேப்டனுக்கு வசனம் சொல்லிக் கொடுத்த கரகாட்டகாரன்!


திமுக தலைவர் கருணாநிதிக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் அதிமுக அரசை குறை கூறுவதே வழக்கமாகிவிட்டது என்று நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.  மதுரை மாநகர் எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் அதிமுக அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டம் பெத்தனியாபுரத்தில் நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ராமராஜன் பேசியதாவது, 


இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது. 


இலவச அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாணவர்களுக்கு லேப்டாப், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், உதவித்தொகை ஆகியவை வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்கள் ஆகும். பிற மாநிலங்கள் அம்மாவின் திட்டங்களை வியப்புடன் பார்க்கின்றன. ஆனால் கருணாநிதியும், விஜயகாந்த்தும் அதிமுக அரசை குறை கூறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். 


விஜயகாந்த் எனக்கு முன்பே ஹீரோவாகிவிட்டார். அவர் நடித்த சிவப்பு மல்லி உள்பட 4 படங்களில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அப்போது அவருக்கு வசனம் சொல்லிக் கொடுத்தவன் நான். அவர் மதுரைக்காரர். மதுரை அருகே உள்ள மேலூர் தான் எனது சொந்த ஊர். விஜயகாந்த் நன்றி மறக்கக் கூடாது. ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்தால் என்னவாகும் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். 


கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் தேமுதிகவினர் போட்டியிட்டார்கள். ஆனால் ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றார்கள். அதுவும் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். சட்டசபைக்கு தனது கட்சிக்காரர் யாரையும் துணைக்கு அழைத்துச் செல்லக்கூட முடியவில்லை. 


ஆனால் கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலி்ல் வெற்றி பெற்ற விஜயகாந்த் தன்னுடன் 28 பேரை சட்டசபைக்கு அழைத்துச் சென்று எதிர்கட்சி தலைவரானார். இதற்கெல்லாம் முதல்வர் அம்மா தான் காரணம் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். முதல்வர் அம்மாவை எதிர்த்தால் தான் முதல்வராகிவிடலாம் என்று அவர் கனவு காண்கிறார். அந்த கனவு ஒரு நாளும் பலிக்காது. 


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் சக்ரவர்த்தி. ஆனால் அரசியலில் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவி்ல்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைத் தான் ஏற்றுக் கொண்டனர். விஜயகாந்த் ஒன்றும் சிவாஜியை விட பெரிய நடிகர் இல்லை. மக்களோடு கூட்டணி, கடவுளோடு கூட்டணி என்று கூறி அவர் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். 


வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும். முதல்வர் அம்மா பிரதமராகுவார். அப்போது தமிழகத்திற்கு தேவையான மத்திய அரசின் உதவிகள் அனைத்தும் கிடைக்கும் என்றார். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget