ரெட்டைத் தெரு திரை விமர்சனம்


கிராமங்களை விட்டு நகரங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்ட தமிழர்களுக்கு, இன்றைக்கு கொண்டாட்டம் என்பதன் அர்த்தம் சரியாக தெரியாது. பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவற்றிற்கும் அவர்களுக்கு உணர்வுபூர்வமான அர்த்தம் தெரிவதே இல்லை. குறிப்பாக, மண்ணுடன் கலந்த நமது விழாக்கள், பண்டிகைகள் அர்த்தமின்றி அவர்களிடத்தில் சுருங்கிவிட்டன. ஏன், எதற்கு என்று எந்தக் காரணமும் தெரியாமல் பல்வேறு சடங்குகளை இன்றைக்கும் நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். பண்டிகைகளும் அதுபோல் அர்த்தமிழந்து சடங்குகளாக மாறிவருகின்றன.

பொங்கல் என்பது இயற்கையை போற்றும் நம் மண் சார்ந்த பண்டிகை. ஆனால் நாம் எல்லோருமே இன்றைக்கு "ஹேப்பி பொங்கல்' என்று கலாசாரம் இன்றி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். உணர்வு மங்கி இரண்டு வார்த்தைகளாகத் தேய்ந்துபோன இந்த ஹேப்பி பொங்கலின் முக்கிய அம்சம் கேஸ் அடுப்பில் - குக்கரில் வைக்கும் சர்க்கரைப் பொங்கலாகி விட்டது.
டிவி, அதிலே வெட்டிக்கு மாரடிக்கும் பட்டிமன்றம், தான் என்னவோ உலகத்தையே வளைத்து சாதித்ததாக கூறும் நடிகர், நடிகை - இதுதான் இன்றைய பண்டிகைகளின் நவீன அர்த்தங்கள். இன்று பொங்கலை நாம் அப்படித்தான் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அந்தப் பண்டிகை எதற்குக் கொண்டாடப்படுகிறது என்ற அடிப்படை நோக்கமே பல பேருக்குத் தெரியாது.
தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தால் இரண்டு நாள்கள் விடுப்பு, அதுவே அரசாங்க ஊழியராக இருந்தால் திங்கள் கிழமை போகி வந்தால் சனிக்கிழமை விடுப்பு தொடங்கி புதன் கிழமை முடிய ஐந்து நாள், அதோடு இரண்டு நாள் சேர்த்து விடுப்பெடுத்து ஆக ஒரு ஒன்பது நாள் லீவு தரும் பண்டிகையாகிவிடும். அது அவர்களுடைய மாபெரும் கொண்டாட்டம்!
இப்படிப்பட்ட எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது "ரெட்டைத்தெரு' குறும்படம். கதை இரா.முருகன், அவரே ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அவர் பொங்கலைப் பற்றி பத்திரிகைக்கு கட்டுரை எழுதுவதன் வாயிலாகவே பொங்கலின் சிறப்புகளை அசைபோடுவது அருமையான எள்ளல்.
முருகன், ராஜு என்ற இரண்டு நண்பர்களின் மூலம் இக் குறும்படம் சொல்லப்பட்டிருக்கிறது. தன் வீட்டு மண்ணை எடுக்கும் போது, எதிர்வீட்டுக்காரியுடன் சண்டை போடும் ஒருத்தி பொங்கல் நாளன்று அதிகாலையில் எதிர்வீட்டுக்காரிக்குக் கோலம் போடத் தெரியாமல் விழிக்கும்போது, அவளை லேசாகத் திட்டியவாறே போய் அவள் வீட்டுவாசலில் கோலம் போடும் சம்பவம் மூலம் கிராமத்தில் பகை எப்படி மிகச் சாதாரணமாக தீர்ந்துவிடுகிறது என்று காட்டியிருப்பது அழகு.
படம் சற்று மெதுவாகச் செல்வது போலிருந்தாலும், நிறைய விவரணைகள், நுணுக்கமான அம்சங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவும் இசையும் மிக உயிர்ப்பாக அமைந்துள்ளது சிறப்பு. குறிப்பாக இசை அற்புதமானதொரு உணர்வை தந்துள்ளது.
அதே போல, அதிகாலை நேரத்தில் கோலம்போடுவதை அந்த ரம்மியமான இருட்டோடு படம் பிடித்துள்ளது ஒளிப்பதிவுக்கு சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். தொழில்நுட்பத்தின் நேர்த்தியானது ஒரு குறும்படத்தை நல்ல மேம்பட்ட அனுபவத்துக்கு இட்டுச் செல்லும் என்பதை இப்படத்தின் மூலம் உணர முடிகிறது.
சமீபகாலமாகவே காட்சியமைப்புகளின் அழகால் தமிழ் சினிமா நமது கிராமங்களை, அது சார்ந்த பண்பாட்டை, திருவிழாக்களை மிக நேர்த்தியாக காட்டி வருவது இங்கே கவனிக்கத்தக்கது. அதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்தக் குறும்படமும் நம் கவனத்தை ஈர்க்கிறது.
திருவிழாக்கள் நம் பண்பாட்டை மட்டுமல்ல, அது ஒரு கூட்டுணர்வை, கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்துவதாக இருப்பதை இப்படம் காட்சிப்படுகிறது. அதே நேரம் இந்தப்படம் கிராமத்து மக்களின் அறியாமையைக் கிண்டல் செய்கிறது. இதுபோன்ற காட்சிப்பிழைகளைத் தவிர்த்துப் பார்த்தால் இது நல்ல படம்தான். சற்று கவனம் செலுத்தியிருந்தால், இன்னும் நேர்த்தியான படமாக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget