மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு ரிசல்ட்க்காக காத்திருக்கும் ஐந்து மாணவர்கள் எதிர்கால கனவோடு ரிசல்டுக்காக காத்திருக்கின்றனர். அதேவேளையில் பதினொன்றாம் வகுப்பை முடித்துவிட்டு ரிசல்டுக்காக காத்திருக்கும் வெண்ணிலாவை மாணவர்களில் ஒருவனான ஹீரோ அணில் காதலிக்கிறான். ஒன்றரை மாத இடைவெளி. இதற்குள் நடக்கும் சம்பவங்கள் படத்தின் கதை. ஐந்து மாணவர்களில் அதிகம் கவர்வது உத்தண்டி. எந்நேரமும் பொரி கடலையை
சட்டை பையில் வைத்து தின்று கொண்டு திரியும் இவரது சேட்டைகள் கலகலப்பூட்டுகிறது.
படம் முழுக்க கொஞ்சம் தொய்வில்லாமல் நகர்ந்திருப்பது இந்த ஐந்து மாணவர்களின் சேட்டையாலும், கூடவே இளையராஜாவின் பாட்டோடு டீச்சர் பின்னாடியே திரியும் இளையராஜா என்பவனின் லவ் டிராக்கும்தான்.
நாயகி வெண்ணிலா ப்ரெஷ்ஷான முகம். அணிலை ஒரு தலையாக காதலிப்பதிலும் காதல் பார்வையிலும் அழகாக தெரிகிறார். வயதுக்கு வரும் முன்னே அணில் மேல் தீவிரமான காதலில் இருப்பதைதான் பொருத்துக் கொள்ள முடியவில்லை.
அணில் அமைதியான, பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கிறார். எப்பவும் எதையோ தவற விட்டதுபோல் இருக்கும் அவருடைய முகம், உணர்வுகளை காட்டவேண்டிய காட்சியிலும் சாதாரணமாகவே கடந்து போகிறது.
படத்தில் மனதில் பதிவது இளையராஜா கதாபாத்திரம்தான். 30 வயதுக்குமேல் இருந்து கொண்டு வார்த்தையே பேசாமல் செல்போனில் நேரத்திற்கு தகுந்தபடியான இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டு காதலியின் பின்னால் போகும் போதெல்லாம் சிரிப்பை அடக்க முடியவில்லை.
சங்கர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அமைதியான சூழலுக்கு பொருந்தி வந்திருக்கின்றன. குடிக்கு எதிரான ‘வந்தவனும் சரி இல்ல.. வாய்த்தவனும் சரி இல்ல...’ பாடல் கேட்கும் ரகம்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் பின்னணியில் ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக இருக்கிறது. படத்தில் குறிப்பிடும்படி இன்னொரு அம்சம் என்னவென்றால், கட்சி விளம்பரங்களை தாண்டி, நகர வாசனை அறியாத மலை கிராமம், மாணவர்கள் திரியும் காட்டுவழிகள் என்று கதை நகரும் இடங்கள்தான்.
இயக்குனர் சேகுவேராவை பற்றி அரைகுறையாக தெரிந்து கொண்டு படத்தை முடித்தாரா? இல்லை, தீவிரவாதியாக நினைத்தாரோ என்னவோ? கடைசியில் அவர் புத்தகத்தை காட்டி, இதனால்தான் ஒரு மாணவன் தீவிரவாதியாகிறான் என்று காட்டியிருப்பது எரிச்சலை வரவழைக்கிறது.
மொத்த்தில் இந்த ‘அணில்’ கடித்த பழம் இனிக்கவில்லை.