எந்த ஒரு எலக்ட்ரானிக் சாதனமாக இருப்பினும் தொடுதிரை வசதி கொண்டதா? என்ற கேள்வி முதலில் எழும்புகிறது. தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களையும், மொபைல்களையும் வாங்குவதை விட அதை சரியாக பராமரிப்பது தான் பெரிய விஷயமாக இருக்கிறது.
எத்தனை தான் துல்லியமான தொடுதிரை தொழில் நுட்ப வசதிகள் இருப்பினும், தூசி படிந்து இருக்கும் தொடுதிரையில் எதையுமே தெளிவாக பார்க்க முடியாது. இதனால் மொபைல் திரையை சுத்தம் செய்து வைத்து கொள்வது மிக அவசியம்.
வீட்டிலேயே எப்படி எளிதாக தொடுதிரையை சுத்தம் செய்வது என்று பார்க்கலாம். முதலில் ஒரு மிருதுவான மைக்ரோஃபைபர் துணியை எடுத்து கொள்ள வேண்டும். மைக்ரோஃபைர் அல்லது சிறிய பஞ்சில் கூட எளிதாக மொபைல் திரைகளை சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்ய துவங்குவதற்கும் முன்பு மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்வது மிக அவசியம் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
மைக்ரோஃபைபர் துணியை வரண்டிருக்கும் நிலையில் பயன்படுத்த வேண்டும். இந்த துணியின் மூலம் தொடுதிரையின் ஓரப்பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். இந்த மிருதுவான துணியால் சுத்தம் செய்யும் போது, வட்டமான வடிவத்தில் கட்டைவிரல் கொண்டு மெதுவாக முதலில் தேய்க்க வேண்டம். இப்படி சுத்தம் செய்வதால் மொபைல் திரைகளில் கீறள்கள் ஏற்படாது.
அதன் பிறகு இந்த சிறிய துணியின் ஒருமுனையில் ஈரம் செய்ய வேண்டும். தொடுதிரையை சுத்தம் செய்வதற்காகவே பிரத்தியேகமான திரவங்கள் மொபைல் ஸ்டோர்களில் கிடைக்கும் அந்த திரவத்தினை பயன்படுத்துவது இன்னும் சிறந்தது. அப்படி கிடைக்கும் லிக்குவிடை, மைக்ரோஃபைபர் துணியில் ஒரு சொட்டு நனைத்து தொடுதிரையினை மீண்டும் சுத்தம் செய்ய வேண்டும்.
இப்படி சுத்தம் செய்த துணியை, அடுத்த முறை சுத்தம் செய்யும் போது அதில் உள்ள அழுக்குகளை அப்புறப்படுத்திவிட்டு பயன்படு்த்துவது அவசியம். இல்லாவிட்டால் இதில் உள்ள அழுக்குகள் மீண்டும் மொபைல் தொடுதிரைகளில் தங்கிவிடும்.
எளிதான முறையில் நாமே சுத்தம் செய்ய இங்கு கூறப்பட்டுள்ள டிப்ஸ் சிறப்பானதாக இருக்கும். இந்த டிப்ஸ்கள் தொடுதிரைகளை சுத்தம் செய்ய மட்டும் அல்லாமல், சாதாரண மொபைல் திரைகளையும் சுத்தம் செய்ய உதவும்.