சாருவும் லதாவும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இதை அவர்கள் இருவருமே பாரமாக கருதவில்லை. ஒருவருக்கொருவர் பாசத்துடன் வாழ்கிறார்கள். பத்தொன்பது வயது வரை இதில் மாற்றம் இல்லை. அதன்பிறகு அந்த அன்பில் சிக்கல் ஏற்படுகிறது. ரவி வடிவில் வரும் காதல் இருவருக்கும் விரிசலை உண்டாக்குகிறது. ரவியை சாரு - லதா இருவருமே விரும்புகிறார்கள். லதாவைவிட மென்மையாக இருக்கும் சாருவையே ரவி விரும்புகிறான்.
இது லதாவுக்கு பொறாமையை ஏற்படுத்த; சாரு, லதாவை பாரமாக நினைக்க அதில் ஏற்படும் தகராறில் இரட்டையரில் ஒருவர் இறந்து விடுகிறார். ரவியின் காதல் நிறைவேறியதா? அவன் விரும்பிய சாரு அவனுக்கு கிடைத்தாளா? என்பதில் திருப்புமுனையை ஏற்படுத்தி படத்தை முடித்திருக்கிறார்கள்.
ஒட்டிப் பிறந்த இரட்டையர் சாரு-லதாவாக ப்ரியாமணி. இரண்டு பாத்திரங்களையும் திறமையாக செய்கிறார். முரட்டுத்தனமான லதாவுக்கே நிறைய வாய்ப்பு. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தேசிய விருது பெற்ற நடிகை என்பதை நினைவுபடுத்துகிறார்.
ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் ஹீரோ ரவிக்கு படத்தில் பெரிதான வாய்ப்பு இல்லை. கிடைத்த இடத்தை நிரப்பியிருக்கிறார். சீதா, சரண்யா எல்லோரும் இருக்கிறார்கள் என்றாலும் பேசும்படி எந்த சுவாரஸ்யமும் இல்லை. படத்தின் கதை நன்றாக இருக்கிறது. இடைவேளைக்கு பின்வரும் திரைக்கதை வேகமாக செல்கிறது ஆனால் படத்திற்கு ஒட்டவே ஒட்டாத ஆர்த்தி, அவரது தம்பியாக வரும் குண்டுபையன் காமெடி டிராக் ஏன் என்பது தெரியவில்லை.
இடைவேளைக்குப் பிறகு படத்தில் ரசிகர்கள் ஒன்றிப்போவதற்கு இடையே வந்து பேசியே அறுக்கும் இந்த காமெடி டிராக் தடைபோடுகிறது. பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். ஒட்டிப் பிறந்த இரட்டையரை இயற்கை மாறாமல் காட்டுவதில் அவருடைய பங்கு அதிகமாகவே இருக்கிறது.
சுந்தர் சி. பாபுவின் இசையில் வயலின் இசை கேட்கும்படி இருக்கிறது. பேய் வரும் காட்சிகள் தவிர மேலும் ஓரிரு இடங்களில் இசை மிரட்டியிருக்கிறது. பாடல்கள் ஒன்றும் மனதில் ஒட்டவில்லை. காப்பியடித்து கதையில் பெயரை போட்டுக்கொண்டு தனது கதைபோல் காட்டிக் கொள்ளாமல் தாய்லாந்து நாட்டு 'அலோன்' படத்தினை முறையாக வாங்கி திரைக்கதையாக்கி இயக்கியதில் இயக்குனர் பொன்குமரன் பாராட்டு பெறுகிறார்.
ஆனால் திரைக்கதையை தமிழ் சினிமாவுக்கு ஏற்றபடி மாற்றியதில் ஏகப்பட்ட தடுமாற்றம். கிளைமாக்ஸ் காட்சியை சுவாரஸ்யமான திருப்புமுனைக்கு பிறகும் இழுத்திருக்க வேண்டாம். ஒட்டிப்பிறந்த இரட்டையர் பற்றிய முதல் தமிழ் படம் இரட்டையரின் சிரமங்களை சரியாக சொல்லாமல் விட்டதினால் படத்தின் உயிர்நாடியான இரட்டையர் கதாபாத்திரம் சுவாரஸ்யமே இல்லாமல் வந்து போகிறது. "சாரு - லதா" வை இன்னும் சுவையாக சொல்லி இருக்கலாம்.