காமெடி படங்கள் எப்போதும் நல்ல வசூலைத் தருகின்றன. ஆனால் பெரிய படங்களால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கிறார் காமெடியன் கருணாஸ். 'திண்டுக்கல் சாரதி', 'அம்பாசத்திரம் அம்பானி' படங்களில் நாயகனாக நடித்து வெற்றி பெற்ற கருணாஸ், அடுத்து 'ரகளபுரம்', 'மச்சான்', 'சந்தமாமா' ஆகிய காமெடி படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதே நேரம் மற்ற நடிகர்களுடன் காமெடியனாகவும் நடிக்க தயங்குவதில்லை.
தனது இந்த நிலை குறித்து கருணாஸ்
கூறுகையில், "காமெடிப் படங்கள் எப்போதுமே பாதுகாப்பானவை. இந்த ஆண்டு நன்றாக ஓடிய பெரும்பாலான படங்கள் நகைச்சுவையாக அமைந்தவைதான்.
மெகா பட்ஜெட்டில் எடுத்த சீரியஸ் கதையம்சம் உள்ள படங்கள் பல தோல்வி அடைந்துள்ளன. இதனால் ரூ 400 கோடி வரை நஷ்டமானதாகக் கூறுகிறார்கள்.
விலைவாசி உயர்வு, போக்குவரத்து நெரிசல், அலுவலகத்தில் நெருக்கடி போன்ற பல காரணங்களால் டென்ஷனில் உள்ள மக்களை சிரிக்க வைப்பதுதான் என்னைப் போன்றவர்களின் வேலை என நினைக்கிறேன். எனவேதான் நான் காமெடி படங்களில் நடித்து வருகிறேன்.
'ரகளபுரம்' இதுவரை வந்த காமெடி படங்களில் சிறப்பானதாக இருக்கும்," என்றார்.