கமல்ஹாஸன் தயாரித்து, இயக்கி, நடிக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தின் டிரெய்லர் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. விஸ்வரூபம் படத்திற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்தே பல வித எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களிடம், சமீபத்தில் வெளியான டிரெய்லர் மேலும் எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டுவிட்டது. கமலின் விஸ்வரூபம் ‘ஆரோ 3D' தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல் தமிழ் படம். உலக அளவில் அந்த தொழில்நுட்பத்தில் வெளிவரும் இரண்டாவது படமும் விஸ்வரூபம் தான்.
( 'RED TAILS’என்ற ஆங்கில படம் ஆரோ 3D தொழில்நுட்பத்தில் வெளிவந்து ஹாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது) விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீடு கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
பிரம்மாண்ட படமாக உருவாகியிருக்கும் விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டையும் பிரம்மாண்ட முறையில் நடக்கிறது. தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார் கமல். ஒரே நாளில் நடக்கும் மூன்று நிகழ்ச்சிகளில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று மற்றொன்றில் பங்கேற்காமல் விடக்கூடாது என்பதற்காக கமல்ஹாஸன் சிறிய ரக விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். ஒரு இடத்தில் நிகழ்ச்சி முடிந்ததும் மற்றொரு இடத்திற்கு விமானம் மூலம் சென்று இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் கமல்.