சென்னை மீரான்சாகிப் தெருப் பக்கம் போனால் அடிக்கடி கோல்ட் என்ற வார்த்தையைக் கேட்க முடியும். இந்த கோல்டுக்கு அர்த்தம் தங்கம் அல்ல... மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள்! எத்தனை ஆண்டுகள் கழித்து, எந்த சென்டரில் போட்டாலும் லாபம் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தரும் படங்கள் இந்த இருவரும் நடித்தவரை என்பதால் அப்படி ஒரு பெயர். இதோ... அந்த நம்பிக்கையை இந்த 2012 லும்
காப்பாற்றித் தந்திருக்கின்றன எம்ஜிஆர் படங்கள். சென்னையில் இப்போது பரவலாக எம்ஜிஆர் மற்றும் ரஜினியின் பழைய படங்களைத் திரையிட்டு, காத்துவாங்கிக் கொண்டிருந்த தியேட்டர்களில் கூட்டத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.
எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப் பெண், வேட்டைக்காரன் போன்ற படங்களை ஒற்றைக் திரை அரங்குகளில் வெளியிட்டு லாபம் பார்த்தனர். இப்போது அந்த வரிசையில் ஒளிவிளக்கு படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படம் கடந்த ஒரு வாரகாலமாக மகாலட்சுமி அரங்கில் நல்ல கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது வாரமாக இந்தப் படம் தொடர்கிறது.
புறநகர்ப் பகுதிகளில் எம்ஜிஆரின் அடிமைப் பெண்ணை மீண்டும் வெளியிட்டுள்ளனர்.
ரஜினி படங்களில் எவர்கிரீன் ஹிட் படமான பாட்ஷாவை சென்னை மற்றும் புறநகர்களில் மீண்டும் மீண்டும் திரையிட்டு வருகின்றனர். அடுத்து படையப்பாவை வெளியிடும் முயற்சியில் உள்ளனர்.
பேப்பர் விளம்பரம் எதுவும் இல்லாமலேயே இந்தப் படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் திலகம் சிவாஜி நடித்த பெரும் வெற்றிப் படமான திருவிளையாடலும் இப்போது மீண்டும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியான பெரிய படங்கள் படுத்துவிட்ட சூழல், தீபாவளி வரையிலான இடைவெளியில் படங்கள் இல்லாத போன்றவற்றைச் சமாளிக்க இந்த இரு சாதனையாளர்களின் படங்கள்தான் இப்போது உதவி வருகின்றன!