கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் ஆடியோ ரிலீஸ் நவம்பர் 7ம்தேதி அவரது பிறந்தநாளில் வெளியிடப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்ததுடன், கதை, இணை தயாரிப்பு மற்றும் இயக்குனராகவும் பணியாற்றி பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் விஸ்வரூபம். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா, பூஜா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. சில காட்சிகள் சென்னை, மும்பையில் எடுக்கப்பட்டன.
படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்தநிலையில், இந்தப்படத்தில் பல புதுமைகளை புகுத்தியுள்ளார் கமல். ஒளிப்பதிவு, சவுண்ட் என எல்லாவற்றிலும் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக ஆரோ 3டி எனும் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளார் கமல். தற்போது அந்த பணிகள் எல்லாம் முடிந்ததையடுத்து விஸ்வரூபம் படத்தின் பாடலை வெளியிட இருக்கிறார். விஸ்வரூபம் பாடல் வெளியீட்டு விழா, கமல்ஹாசனின் 58வது பிறந்த நாளான வருகிற நவம்பர் மாதம் 7ம்தேதி நடைபெற உள்ளது.
முதன்முறையாக சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 நகரங்களில் ஒரே நாளில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது. 3 நகரங்களிலும் ஒரேநாளில் கமல்ஹாசன் சென்று விழாவில் பங்கேற்று சி.டி.க்களை வெளியிடுகிறார். கமல்ஹாசனின் பிறந்த நாளும் விஸ்வரூபம் பாடல் வெளியீட்டு விழாவும் தமிழ்நாட்டின் 3 நகரங்களில் ஒரே நாளில் நடைபெறுவதால், விழாக்களை பிரம்மாண்டமாக நடத்த அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.