ஒருவகையில் நமது இயக்குனர்களைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது. சாதாரண கதையை இவர்கள் விரலால் தொடுவதில்லை. மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் தகராறு, தமிழர்களின் வீர வரலாறு என்று எல்லாமே முற்போக்கு கதைகள். தங்கர் பச்சான் தனது அம்மாவின் கைப்பேசி ஆடியோ விழாவில் இப்படிச் சொன்னார். கூடன்குளம் ஒரு கதை என்கிட்ட இருக்கு. ஒரே படம் எல்லாமே மாறிடும்.
ஈழப் பிரச்சனை.... அதுக்கும் ஒரு கதை வச்சிருக்கேன். ஒரே படம் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்திடும். இவ்வளவு பேரை முள்ளிவாய்க்காலில் சாகக் கொடுத்ததற்கு தங்கர் கையில் பத்து கோடி தந்திருந்தால் ஒரு படம் எடுத்து தனி ஈழம் வாங்கித் தந்திருப்பார். உதயகுமார் இனியாவது பிடிவாதம் பிடிக்காமல் கூடன்குளம் பிரச்சனையை தங்கரிடம் விட்டு விடுவது நல்லது.
சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம். பூர்வகுடி என்ற படம் தயாராகியிருக்கிறது. இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மையப்படுத்தியது. ஜல்லிக்கட்டில் காளைகளை கொடுமைப்படுத்துறாங்க என்று ஒரு கோஷ்டி போராடி தடை வாங்கி இப்போது பலத்த பாதுகாப்புடன் இரண்டு மூணு டஜன் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்திருக்கிறார்கள்.
பூர்வகுடியில் மாடு பிடிக்கும் வீரர்களின் வாழ்க்கையை சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் இப்ராஹிம். இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களை வரவழைத்து ஜல்லிக்கட்டை நடத்தியிருக்கிறார்கள். மொத்தம் ஏழு நாட்கள் இதனை ஷுட் செய்திருக்கிறார்கள்.
விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது.