அண்மைக் காலத்தில் பார்த்த காட்டூன் படங்களிற்குள் வித்தியாசமான படம். நகைச்சுவையும், கலகலப்பையும் மட்டும் வைத்து படத்தை எடுக்காமல், நல்ல பல செய்திகளையும் புகுத்தி தந்திருக்கின்றார்கள். கிராபிக்ஸின் தரத்திலும் குறை வைக்கவில்லை. புத்தகத்திலிருந்து திரைக்கு வந்த கதையாதலால், இந்தத் திரைக்கதையை வழமையான காட்டூன் படங்களின் கதைகளைப்போல இரண்டு வரியில் சொல்லிவிட முடியாது. படம் கற்பனையான ஒரு அரசாட்சியில் வசிக்கும் ஒரு பெருச்சாளியையும்
(rat), ஒரு சுண்டெலியையும் (mouse) மையமாகக் கொண்டு போகின்றது. கப்பல் ஒன்றை வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் பெருச்சாளி Roscuro, Dor நகரத்தில் நடைபெறும் வருடாந்த சூப் (soup) பெருவிழாவைப் பார்க்க வருகின்றது. அரசசபை சூப்பின் வாசம் வெகுவாகக் கவர, அதை எட்டிப் பார்க்கும் Roscuro தவறிப்போய் அரசியின் சூப்பிற்குள் விழுந்து விடுகின்றது. எலி விழுந்த சூப்பைக் குடித்த அதிர்ச்சியில் அரசி மாரடப்பில் இறந்து விடுகின்றார்! மனைவியை இழந்த கவலையிலும், ஆத்திரத்திலும் நாட்டில் சூப்பிற்கும், பெருச்சாளிகளிற்கும் அதிகாரபூர்வமாகத் தடைவிதித்துவிட்டு கண்ணீரும் கம்பலையுமாக அமர்ந்துவிடுகின்றார் அரசர். அரசனின் பராமரிப்பின்றி நாடு சீரழிந்து கொண்டு செல்கின்றது; கூடவே அப்பாவால் கைவிடப்பட்ட அரசிளங்குமாரியும். மக்களிடமிருந்து தப்பியோடும் Roscuro, பாதாளச் சிறைச்சாலையின் அடியில் இருக்கும் பெருச்சாளி நகரத்தில் வந்து தஞ்சமடைகின்றது.
இவை இவ்வாறு இருக்க, அரண்மனையில் இருக்கும் சுண்டெலி நகரத்தில் பிறக்கின்றது கதாநாயகன் Despereaux. பிறந்ததிலிருந்தே மற்றைய சுண்டெலிகளின் சுபாவத்திலிருந்து மாறுபட்டு நிற்கின்றது. சுண்டெலிகளிலேயே மிகவும் சிறிதான தோற்றமும், ஆளைவிட பெரிய காதையும், கண்ணையும் கொண்டது இது; மற்றைய சுண்டெலிகள் முறையாக பயப்பிடுவது எப்படி என்பதை பள்ளிக்கூடத்தில் பயின்று கொண்டிருக்க , பாடப் புத்தகத்தில் பூனையின் படத்தை வரைந்து வாத்தியாருக்கு வெறுப்பேற்றுகின்றது Despereaux!! அரண்மனை நூலகத்திலிருக்கும் புத்தகங்களை எவ்வாறு அரித்து தின்னலாம் என்று Despereaux’ற்கு படிப்பிக்க அதை அழைத்து வருகின்றது Despereaux’இன் அண்ணா; Despereaux’வோ புத்தகங்களை நன்னுவதை விடுத்து, அதைப் படிப்பதில் ஆழ்ந்துவிடுகின்றது. வீர சாகசக் கதைகளைப் படிக்கும் Despereaux, தன்னையும் அரசிளங்குமாரிகளை காப்பாற்றும் வீரனாக வடிவமைத்துக் கொள்கின்றது. கதையின் நடுவே அரண்மனையில் வசிக்கும் உண்மையான இளவரசியையும் சந்தித்து நட்புக் கொள்கின்றது. ஆனால் மனிதரோடு தொடர்பு வைப்பது சுண்டெலியுலகத்தில் தண்டனைக்குரிய குற்றமாதலால், Despereaux’இன் இந்தத்தொடர்புப்பைக் கண்டிக்கும் சுண்டெலிக்கூட்டம், அவனை பாதாளச் சிறைக்குழியில் போட்டுவிடுகின்றனர். இங்கே Roscuro’வைச் சந்திக்கின்றது Despereaux. பிறகு இவர்களின் வாழ்வு, எவ்வாறு நாட்டின் எதிர்காலத்தோடு இணைக்கப் படுகின்றது என்பதை, ஏக்கம், ஏமாற்றம், வீரச்செயல் என்று பல்வேறு உணர்வுகளோடு சொல்லுகின்றது மிகுதிப் படம்.
அந்த வித்தியாசமான பின்னணி வர்ணனையோடு படம் ஆரம்பிக்கும்போதே, படம் வழமையான காட்டூன் படங்கள் போல் இருக்கப் போவதில்லை என சற்றே அறியலாம். அரசி மண்டையைப் போடும்போது அது உறுதியாகின்றது. அருமையான கிராபிக்ஸ் தவிர எனக்குப் பிடித்தது பின்னணி இசை — சிறுவர் படங்களிற்கான இசைபோலன்றி சற்றே பக்குவப்பட்ட இசை. படத்தின் பாத்திரங்களிற்கு குரல் கொடுத்தவர்கள் எல்லாரும் பிரபல்யங்கள் (Harry Potter’இன் Hermione ஆக வரும் Emma Watson‘தான் இளவரசிக்குக் குரல் கொடுத்திருப்பது.) எல்லோரும் நன்றாகச் செய்திருக்கின்றார்கள். படத்தில் சூப்புக்கும், மழைக்கும், சூரியனுக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை; எதையையோ symbolic’க்காக சொல்ல முற்பட்டிருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். குடும்பத்தில் இருக்கும் சிறாரோடு, பெரியவர்களும் பார்க்கக் கூடிய படம்.